தடைசெய்யப்பட்டுள்ள 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்கும் பதிவு இடைநிறுத்தப்பட்டுள்ள 83 அரபுக் கல்லூரிகளுக்கான தடையை நீக்குவதற்கும் அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அமைச்சின் உயர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கான ஆலோசனைக் குழுக் கூட்டம் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தலைமையில் கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இதில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, முஸ்லிம் சமூகத்தின் நீண்டகால சமயப் பிரச்சினைகள் குறித்து அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு முஸ்லிம் சமூகம் வாக்களிக்கவில்லை என்ற காரணத்தினால் கொரோனா தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டதுடன், 40,000 புனித குர்ஆன் பிரதிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு, முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் பதிவுக்கு விண்ணப்பித்திருந்த 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுகளும் முடக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான ஆட்சியில் இத்தடைகள் நீக்கப்படும் என முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்திருந்த போதிலும் இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் தீர்வு கிடைக்காமையால் மக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர் எனத் தெரிவித்த அவர் சகல இனங்கள் மத்தியிலும் நீதி, நியாயத்துடன் செயற்படும் அமைச்சர் சுனில் செனவியின் அணுகுமுறையைப் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததுடன் ஜம்மியத்துல் உலமா, சூரா சபை மற்றும் முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகள் அமைப்பினர் உள்ளிட்ட தரப்பினரும் ஜனாதிபதி, அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரிடம் பல தடவைகள் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளதை உதுமாலெப்பை நினைவுகூர்ந்தார். புனித ரமழான் மாதம் நெருங்கி வருவதால் புனித குர்ஆன் பிரதிகளை விரைவாக விடுவித்து, 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுக்கான தடையையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி முஸ்லிம்களின் புனித குர்ஆன் பிரதிகளை விடுவிக்குமாறு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீண்டகாலமாகத் தன்னிடம் கோரிக்கை விடுத்து வருவதாகவும் இது குறித்துத் தான் ஏற்கனவே பாராளுமன்றத்தில் பதிலளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தடைசெய்யப்பட்டுள்ள புனித குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்கும், 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுக்கான தடைகளை நீக்குவதற்கும் தேவையான அவசர ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு அமைச்சின் செயலாளர், முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.