இலங்கையின் சிரேஷ்ட சட்ட வல்லுநர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் சட்டத்துறையில் தனது 40 ஆண்டுகால பணிப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமாணிப் பட்டம் (LL.M) பெற்றுள்ள இவர் கடந்த நான்கு தசாப்தங்களாக நாட்டின் சட்டத்துறையில் அர்ப்பணிப்புடனும் தொழில்சார் நேர்மையுடனும் பணியாற்றி வருபவராவார். பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது முதல் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளில் முன்னிலையாகித் திறம்பட வாதாடியமை வரை இவரது சட்ட ஆளுமையும் புலமையும் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகின்றன.
சட்டத்துறையில் ஆற்றிய சிறப்பான சேவைக்காக ‘ஜனாதிபதி சட்டத்தரணி’ எனும் உயரிய கௌரவத்தைப் பெற்ற இவர் இளம் சட்டத்தரணிகளுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் திகழ்ந்து வருகின்றார்.
நீண்டகால சட்ட அனுபவத்தைக் கொண்ட எம். நிஸாம் காரியப்பர்்தற்போது பாராளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் பிரதிநிதித்துவப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். தனது சட்ட அறிவையும் பாராளுமன்ற ஜனநாயக மரபுகளையும் இணைத்து சட்டவாக்க விவகாரங்களிலும் மக்கள் நலன் சார்ந்த விடயங்களிலும் அவர் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சட்டத்துறையில் 40 ஆண்டுகால நீண்ட மைல்கல்லை எட்டியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பருக்கு, சக சட்டத்தரணிகள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.