தேசிய பாடசாலைகளுக்கும் மாகாணப் பாடசாலைகளுக்கும் இடையிலான மாதாந்த மின்சாரக் கட்டண ஒதுக்கீட்டில் காணப்படும் பாரிய ஏற்றத்தாழ்வை நீக்கி மாகாணப் பாடசாலைகளுக்கான கொடுப்பனவையும் தேசிய பாடசாலைகளுக்கு நிகராக அதிகரிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்குப் பரிந்துரைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் கடந்த நவம்பர் 20ஆம் திகதி பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சின் உயரதிகாரிகளும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை இவ்விடயத்தை முன்வைத்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சினால் மாதாந்த மின்சாரக் கட்டணமாக 25,000 ரூபா வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். எனினும், கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கு 2011ஆம் ஆண்டு மார்ச் 01ஆம் திகதி வெளியிடப்பட்ட EP/20/01/2011 ஆம் இலக்கச் சுற்றுநிருபத்தின் அடிப்படையிலேயே இன்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
தற்போது கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு மாதாந்தம் வழங்கப்படும் மின்சாரக் கட்டண ஒதுக்கீடு பின்வருமாறு அமைந்துள்ளது:
•1AB மாகாணப் பாடசாலைகள்: 1,500 ரூபா
• 1C மாகாணப் பாடசாலைகள்: 1,200 ரூபா
• வகை II (Type II) பாடசாலைகள்: 800 ரூபா
• வகை III (Type III) பாடசாலைகள்: 400 ரூபா
நாட்டின் பல மாகாணங்களில் பாடசாலைகளுக்கான மாதாந்த மின்சாரக் கட்டணக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் கிழக்கு, வடமத்திய மற்றும் வட மாகாணங்களில் இதுவரை எவ்வித அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என எம்.எஸ்.உதுமாலெப்பை சுட்டிக்காட்டினார். இதனால் குறிப்பாகக் கிழக்கு மாகாணப் பாடசாலை அதிபர்களும் பாடசாலைச் சமூகமும் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான பாடசாலைச் சொத்துகளை மின்விளக்குகளின் உதவியுடன் பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாகாணப் பாடசாலைகளின் மின்சாரக் கட்டண ஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நோக்கில் தாம் பாராளுமன்றத்தில் விசேட பிரேரணையொன்றைக் கொண்டுவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இக்கோரிக்கையைக் கவனத்தில் கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, இது தொடர்பான விபரங்களைக் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மேலதிக செயலாளரிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து மாகாணப் பாடசாலைகளுக்கான மாதாந்த மின்சாரக் கட்டணக் கொடுப்பனவை அதிகரிக்குமாறு கல்வி அமைச்சின் ஊடாக மாகாண ஆளுநர்களுக்குப் பரிந்துரை வழங்கப்படும் எனப் பிரதமர் தெரிவித்தார்.
இவ்விடயத்தில் சாதகமான தீர்மானத்தை மேற்கொண்டமைக்காகப் பிரதமருக்கு மக்கள் சார்பில் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.