Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் ஹாபிழ்கள் மற்றும் கல்விச் சாதனையாளர் கௌரவிப்பு விழா | | இலங்கை – ஐக்கிய அரபு அமீரக பாராளுமன்ற நட்புறவுச் சங்க உதவிச் செயலாளராக உதுமாலெப்பை எம்.பி. தெரிவு | | தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித குர்ஆன் பிரதிகளை விடுவிக்க ஜனாதிபதி பணிப்புரை |
Nov 28, 2026

தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித குர்ஆன் பிரதிகளை விடுவிக்க ஜனாதிபதி பணிப்புரை

Posted on November 26, 2026 by Admin | 65 Views

சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித குர்ஆன் பிரதிகளைத் தாமதக் கட்டணம் செலுத்தாமல் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கடந்த 23ஆம் திகதி பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இந்தப் பணிப்புரையை வழங்கினார். இக்கூட்டத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

கூட்டத்தில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, புனித ரமலான் மாதம் நெருங்கி வருவதால் தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்ஆன் பிரதிகளை விடுவித்துத் தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவுக்கு முஸ்லிம் சமூகம் வாக்களிக்காததன் காரணமாகவே பழிவாங்கும் நோக்கில் அந்தப் பிரதிகள் தடை செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், தற்போதைய ஜனாதிபதி அவற்றை விடுவிப்பார் என்ற நம்பிக்கை முஸ்லிம் சமூகத்திற்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்ஆன் பிரதிகளை விடுவிப்பது தொடர்பில் முஸ்லிம் உலமாக்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் நிலவியதாகவும், அது குறித்துக் கலந்துரையாடியதன் பின்னர் அவற்றை விடுவிக்குமாறு முஸ்லிம் கலாசாரத் திணைக்களப் பணிப்பாளருக்கு ஏற்கனவே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதி அமைச்சர் முனீர் முலப்பருக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இதன்போது மீண்டும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கூட்டத்திலும் தாம் இக்கோரிக்கையை முன்வைத்ததாகச் சுட்டிக்காட்டினார். அதன்போது அமைச்சர் சுனில் செனவி குர்ஆன் பிரதிகளை விடுவிக்குமாறு பணிப்புரை வழங்கியிருந்தபோதும், அவற்றை விடுவிப்பதற்கு 3 கோடி ரூபா தாமதக் கட்டணமாகச் செலுத்த வேண்டியுள்ளதாகவும், அது தொடர்பில் சுங்கத் திணைக்களத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் முஸ்லிம் கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தெரிவித்ததாக அவர் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

சுங்கத் திணைக்களத்திற்குத் தாமதக் கட்டணம் செலுத்தாமல் புனித குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார். இதற்காக ஜனாதிபதிக்கும் அதிகாரிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தனது நன்றியைத் தெரிவித்தார்.