தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவை முன்னோக்கிக் கொண்டிருக்கும் அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் “அல்குர்ஆனின் பேரொளியும் கல்விச் சாதனையாளர்களும்” எனும் தொனிப்பொருளிலான கௌரவிப்பு விழா கடந்த சனிக்கிழமை (21) கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். அஷ்ரப் (ஷர்க்கி) தலைமையில் நடைபெற்றது.
இரு அங்கங்களாக நடைபெற்ற இவ்விழாவில் புனித அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த மாணவர்கள் ,2024/2025ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
விழாவின் முதல் அங்கமாக கல்லூரியின் ஹிப்ழுப் பிரிவு பொறுப்பாசிரியர் அல்ஹாபிழ் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பஸ்லான் (ஷர்க்கி) தலைமையில் அல்குர்ஆன் மனன நிறைவு நிகழ்வு இடம்பெற்றது. இதில் ஒரே நாளில் ஒரே மேடையில் நான்கு மாணவர்கள் புனித அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து நிறைவு செய்தனர்.
இரண்டாவது அங்கமாக பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எச். பெளஸ் கலந்துகொண்டதுடன், பிரதம பேச்சாளராக அக்கரைப்பற்று அஷ்பால் அல் குர்ஆன் அகடமி அதிபர் அல்ஹாஜ் அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் அல்காரி எஸ். அப்துல் ஹாதி (நழீமி) பங்கேற்றார். விசேட அதிதிகளாக மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாஜ் அல்ஹாபிழ் என்.எம்.எம். அப்துல்லாஹ், கல்லூரி பணிப்பாளர் சபைத் தலைவரும் ஓய்வுபெற்ற கிழக்கு மாகாண முதலமைச்சுச் செயலாளருமான அல்ஹாஜ் யூ.எல்.ஏ. அஸீஸ், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் ஏ.சி. அஹமட் அப்கர், பிரதேச சபைத் தவிசாளர் அல்ஹாஜ் ஏ.எஸ்.எம். உவைஸ், உதவிக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எல். பாயிஸ் மற்றும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். பாயிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்களுடன் கல்லூரி பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், உலமாக்கள், கலாசார உத்தியோகத்தர், அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மற்றும் செயலாளர், பாடசாலை அதிபர்கள், கல்விமான்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.







