Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று

Posted on April 14, 2026 by Admin | 307 Views

பாகிஸ்தானில் மருத்துவ அலட்சியத்தால் குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று பரவியிருக்கும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

2024 நவம்பர் முதல் 2025 அக்டோபர் வரை, மொத்தம் 331 குழந்தைகள் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள டான்சா நகரின் THQ அரச வைத்தியசாலையுடன் தொடர்புடையதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அங்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதே இந்த தொற்றுப் பரவலுக்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு உள்ளூர் வைத்தியர் முதன்முதலில் இந்த பிரச்சினையை சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து விசாரணைகள் தொடங்கப்பட்டன. அதன் அடிப்படையில் 2025 மார்ச் மாதத்தில் அந்த வைத்தியசாலையின் வைத்தியக் கண்காணிப்பாளர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தை மேலும் வெளிச்சமிட்டது பிபிசி (BBC Eye) நடத்திய 32 மணி நேர ரகசியப் புலனாய்வு ஆகும். அந்த புலனாய்வில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள், மருத்துவப் பணியாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் ஊசிகளைப் பயன்படுத்தியதை தெளிவாக காட்டுகின்றன.

ஒரே மருந்து குப்பியில் இருந்து பல குழந்தைகளுக்கு ஊசி செலுத்தப்பட்டதோடு, பயன்படுத்தப்பட்ட ஊசிகள் குறைந்தது 10 முறை வரை மீண்டும் பயன்படுத்தப்பட்டிருப்பதும் காணொளிகளில் பதிவாகியுள்ளது. மேலும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட கையுறைகள் அணியாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

பயன்படுத்தப்பட்ட ஊசிகள் திரட்டப்பட்டு மீண்டும் பயன்படுத்தத் தயாராக வைக்கப்பட்டிருப்பது போன்ற அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் இந்த குற்றச்சாட்டுகளை வைத்தியசாலை நிர்வாகம் மறுத்துள்ளது. வைத்திய கண்காணிப்பாளர் டாக்டர் காசிம் புஸ்தார், வெளியான வீடியோ உண்மையானதல்ல என்றும் அது தாம் பொறுப்பேற்கும் முன்பு எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இதுபோன்ற சம்பவங்கள் புதியதல்ல. 2019 ஆம் ஆண்டு ராடோ டெரோ நகரில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட சம்பவமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் கடந்த ஆண்டு கராச்சியிலும் ஊசிகளை மீண்டும் பயன்படுத்தியதால் குறைந்தது 84 நோய்த்தொற்று வழக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர்ச்சியான சம்பவங்கள் நாட்டின் சில பகுதிகளில் மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக மீறப்படுகின்றன என்பதற்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகின்றன.