Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

அலையில் சிக்கிய மாணவியைக் காப்பாற்ற உயிரைத் தியாகம் செய்த அதிபர்

Posted on May 26, 2026 by Admin | 259 Views

கல்விச் சுற்றுலாவின் போது கடலில் மூழ்கிய மாணவி ஒருவரைக் காப்பாற்ற முயன்ற பாடசாலை அதிபர் ஒருவர், அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் கிரிந்த கடற்கரையில் நிகழ்ந்துள்ளது.

படல்கும்புர, அலுப்பத்தை பீலி மலைப் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய அதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடலில் மூழ்கிய 14 வயதுடைய மாணவி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படல்கும்புர பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்களும் மாணவர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) கல்விச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டுள்ளனர். சுற்றுலாவின் ஒரு பகுதியாக, அன்றைய தினம் மாலை அவர்கள் கிரிந்த கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.

அங்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது, திடீரென 14 வயதுடைய மாணவி ஒருவர் ராட்சத அலையினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மாணவி நீரில் மூழ்கி உயிருக்குப் போராடுவதைக் கண்ட பாடசாலை அதிபர், சிறிதும் யோசிக்காமல் அவரைப் பாதுகாப்பதற்காக உடனடியாகக் கடலில் குதித்துள்ளார். எனினும், கடலின் கடுமையான சீற்றம் மற்றும் பலத்த அலை காரணமாக அதிபரும், மாணவியும் சேர்ந்தே கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த உயிர் பாதுகாப்புப் பிரிவினரும் (Life Guards) பிரதேசவாசிகளும் உடனடியாகச் செயற்பட்டு, இருவரையும் மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் இருவரும் மீட்கப்பட்டு, உடனடியாக தெபரவெவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அதிபர் ஏற்கனவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி தற்பொழுது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் குறித்து கிரிந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியைக் காப்பாற்றத் தன் உயிரைத் தியாகம் செய்த அதிபரின் செயல் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.