Top News
| தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு |
Oct 15, 2026

கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக ஏ.எல்.தௌபீக் நியமனம்

Posted on June 1, 2026 by Admin | 194 Views

(பாலமுனை செய்தியாளர்- சலா)

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் “சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக” (MN – 7, SUPRA GRADE) அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஜனாப் ஏ.எல். தௌபீக் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். 2023 ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கான பதவியுயர்வு நியமனக் கடிதம் இன்று (ஜூன் 01) திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது ஆளுநரின் செயலாளர் பி. வாகீசன், கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே. குணநாதன், பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்றும் சுமார் 45 கலாசார உத்தியோகத்தர்களில் தரம் I ஐச் சேர்ந்த தகுதியானவர்களிடமிருந்து மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதனடிப்படையில் நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையின் மூலம் மாகாண ரீதியாக இருவர் மாத்திரமே இந்த உயர்பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜனாப் ஏ.எல். தௌபீக் ஆவார். மற்றையவர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. ஐ.ஆர்.ஜி. நிமல்சிறி பண்டார என்பது குறிப்பிடத்தக்கது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பட்டதாரியான ஏ.எல். தௌபீக் அரச சேவையில் நிகழ்ச்சித்திட்ட உதவியாளராக, ஆசிரியராக மற்றும் அதிபராக எட்டு வருடங்கள் பணியாற்றியுள்ளார். பின்னர் போட்டிப் பரீட்சை மூலம் கலாசார உத்தியோகத்தராக நியமனம் பெற்று, 2000ஆம் ஆண்டு முதல் அம்பாரை மாவட்டத்தின் இறக்காமம், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகங்களில் கடமையாற்றினார்.

2009ஆம் ஆண்டு முதல் அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டு மாவட்ட செயலகம் மற்றும் மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் 17 வருடங்கள் மாவட்ட மட்ட கலாசார வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார். எவ்வித இன, மத வேறுபாடுகளுமின்றி அனைவரது மனங்களையும் கவரும் வகையில் மக்கள் பணியாற்றிய இவருக்கு கிடைத்துள்ள இந்த உயர்பதவியானது மாகாண மற்றும் மாவட்ட மூவின கலைஞர்கள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளதுடன் பிராந்தியத்தின் கலாசார மேம்பாட்டிற்காக அவர் ஆற்றிவரும் அர்ப்பணிப்புமிக்க சேவையினை பாராட்டி கலை உலகினர் தமது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.