(பாலமுனை செய்தியாளர்-சலாஹ்)
இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் (FSLGA) ஏற்பாடு செய்த கௌரவ உறுப்பினர்களின் திறன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உறுப்பினர்களுக்கிடையிலான கிழக்கு மாகாண மட்ட விவாதப் போட்டி இன்று (04) மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியில் கிழக்கு மாகாணத்தின் இரு முக்கிய உள்ளூராட்சி மன்றங்களான அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகிய அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. ஆரம்பம் முதலே இரு அணிகளும் சமபலத்துடன், ஆதாரபூர்வமான கருத்துக்களையும் சாதுரியமான வாதங்களையும் முன்வைத்து மோதிக்கொண்டன. இறுதியில் நடுவர்களின் தீர்ப்பின்படி:
அட்டாளைச்சேனை பிரதேச சபை அணி 268 புள்ளிகளைப் பெற்று, 257 புள்ளிகளைப் பெற்ற அக்கறைப்பற்று பிரதேச சபை அணியை 11 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றியைப் பதிவு செய்து
அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
சிறப்பான வாதத் திறன், தெளிவான கருத்தாடல், மிகத் துல்லியமான ஆதாரபூர்வ முன்வைப்புகள் மற்றும் அணியின் அசாதாரண ஒற்றுமையே அட்டாளைச்சேனை அணியின் இந்த வரலாற்று வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது” என நடுவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வெற்றிபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை அணிக்கு பிரதேச மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மத்தியில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருவதுடன் இந்த வெற்றிக்காகப் பின்னணியில் இருந்து அயராது உழைத்த சபை தவிசாளர், செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் அணியினர் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மிகக் கடுமையான சவாலை எதிரணிக்கு வழங்கி சில புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்ட அக்கரைப்பற்று பிரதேச சபை அணியினரின் திறமையான வாதப் பிரதிவாதங்களை அட்டாளைச்சேனை சபை உறுப்பினர்கள் பாராட்டி அவர்களுக்கு தமது வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.