சஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்த லொறி ஒன்று பழுதடைந்ததால் தண்ணீரின்றி கடும் தாகத்தினால் தவித்து 49 நைஜீரியப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மாலி மற்றும் அல்ஜீரிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ‘அசமகா’ பகுதியிலிருந்து மேற்கே சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில் இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாலி நாட்டில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் நைஜீரியா நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே அவர்கள் பயணித்த லொறி திடீரென இயந்திரக் கோளாறுக்குள்ளாகியுள்ளது. சுட்டெரிக்கும் சஹாராப் பெருவெளியில் சிக்கிக்கொண்ட இப்பயணிகள் குடிப்பதற்குத் தண்ணீரின்றி மெல்ல மெல்ல மரணத்தைத் தழுவியுள்ளனர்.
எனினும் இந்தத் துயரத்திலிருந்து இருவர் மாத்திரம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். அவர்கள் தங்களைக் காப்பற்றிக் கொள்வதற்காக சுடுமணலில் சுமார் 50 கிலோமீற்றருக்கும் அதிக தூரம் தாகத்தோடு கால்நடையாகவே பயணித்து ‘அசமகா’ பகுதியைச் சென்றடைந்துள்ளனர். அங்குள்ள அதிகாரிகளிடம் அவர்கள் வழங்கிய அதிர்ச்சியூட்டும் தகவலையடுத்து நைஜீரிய நிவாரணக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு பழுதடைந்த லொறிக்கு அடியிலும் அதனைச் சுற்றிலும் சிதறிக் கிடந்த 49 பேரின் சடலங்களையும் அவர்கள் மீட்டனர். பாலைவனத்தின் தீவிர காலநிலை மற்றும் சடலங்களின் நிலைமையைக் கருத்திற்கொண்டு மீட்கப்பட்ட அனைத்துச் சடலங்களும் அதே இடத்திலேயே கூட்டுப் புதைகுழியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.