Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணி ஆரம்பம்

Posted on June 8, 2026 by Admin | 194 Views

ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் வேரஹெர மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வளாகத்தில் இன்று (08) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் இந்த பணிகள் உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்பட்டன.
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, நீண்டகாலமாக ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் மூலமே வாகன இலக்கத் தகடுகள் அச்சிடப்பட்டு வந்த நிலையில் சில காரணங்களால் இப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். உரிய கொள்முதல் நடைமுறைகளின்படி புதிய நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து தரம் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடுகளுக்கு அமைவாகவே இன்றைய தினம் அச்சிடல் பணிகள் மறுபடி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது சுமார் 6 இலட்சம் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்ட நாளில் இருந்து கணக்கிட்டால் அச்சிடுவதற்கு சுமார் ஒன்றரை இலட்சம் இலக்கத் தகடுகள் உள்ளதோடு அவற்றை அச்சிடும் பொறுப்பு இந்த ஒப்பந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதி இலக்கத் தகடுகளை எவ்வாறு அச்சிடுவது, அதற்கும் இதே நிறுவனத்தைப் பயன்படுத்துவதா என்பது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறிய பிரதி அமைச்சர், எதிர்காலத்தில் இந்தத் தேக்க நிலையை முழுமையாகத் தீர்க்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.

தற்போது தினசரி கிடைக்கப் பெறும் அனைத்து இலக்கத் தகடுகளையும் உடனுக்குடன் அச்சிட்டு விநியோகிக்கும் திறன் திணைக்களத்திற்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், வாகனப் பதிவு நிறைவடைந்து இலக்கத் தகடு அச்சிடப்பட்டதும் அது குறித்த விபரங்களை வாகன உரிமையாளரின் கைத்தொலைபேசிக்கு குறுஞ்செய்தி (SMS) மூலம் உடனுக்குடன் அறிவிக்கும் புதிய டிஜிட்டல் முறைமையொன்றும் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்தார்.