Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

பொத்துவில், திருக்கோவில் மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி – ஹெட ஓயா திட்டம் மீண்டும் உயிர் பெறுகிறது

Posted on June 10, 2026 by Admin | 173 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் கவனிப்பாரற்றுக் காணப்படும் ‘ஹெட ஓயா’ நீர்ப்பாசனத் திட்டத்தினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் போதே இந்த உறுதியான வாக்குறுதி ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.

“பொத்துவில், லஹுகல, சியம்பலாண்டுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கவும், ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்காணிகளுக்கு நீர்ப்பாசனம் வழங்கவும் 2017 டிசம்பர் 12ஆம் திகதி ‘ஹெட ஓயா’ திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதற்காக 50 மில்லியன் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டு சாத்தியவள அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது ஹெட ஓயா திட்டம் இடை நடுவே நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர். 

நீர்ப்பாசன அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் ஹெட ஓயா நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பாக முன்மொழிவுகளை தான் முன்வைத்த போது ஹெட ஓயா நீர்ப்பாசனத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். 

மேலும் நீர்வழங்கல் அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் ஹெட ஓயா நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பாக முன்மொழிவுகளை நான் முன்வைத்த போது ஹெட ஓயா நீர்ப்பாசனத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொத்துவில் பிரதேசத்திற்கான குடிநீர் வழங்கும் திட்டம் உலக வங்கியின் ஊடாக சேனநாயக்க நீர்த்தேக்கத்திலிருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீர்வழங்கல் அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துவிட்டு தற்போது பொத்துவில் பிரதேசத்திற்கான குடிநீர் வழங்கும் திட்டத்தினை உலக வங்கி கைவிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.இதனால் ஒட்டுமொத்தப் பகுதி மக்களும் கடுமையான குடிநீர் பற்றாக்குறையையும், விவசாயிகள் பெரும் நஷ்டத்தையும் எதிர்கொண்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, பொத்துவில், லஹுகல, சியம்பலாண்டுவ, திருக்கோவில் பிரதேசத்தில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கான குடிநீர் திட்டங்களையும் ஆயிரக்கணக்கான நெற்காணிகளுக்கான நீர்ப்பாசனம் வழங்குவதற்காக இடைநிறுத்தப்பட்டுள்ள ஹெட ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தினை மீள ஆரம்பிக்குமாறும் ஹெட ஓயா திட்டத்தினை ஆரம்பிக்க முடியாவிட்டால் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமாக உள்ள வடமூசா குளத்தினை புனரமைத்து வழங்க வேண்டும் என கெளரவ ஜனாதிபதி அவர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தனது பிரேரணை ஊடாக வலியுறுத்தினார்.

கௌரவ ஜனாதிபதி அவர்கள், அம்பாறை மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் பண்டாரவிடம், “ஹெட ஓயா மற்றும் வடமூசா குளம் ஆகிய இரண்டில் பொத்துவில் மற்றும் திருக்கோவில் பிரதேச மக்களின் குடிநீர்த் தேவையை முழுமையாக நிவர்த்தி செய்யக்கூடிய சிறந்த வழி எது?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பணிப்பாளர் பண்டார, “நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஹெட ஓயா திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதே நிரந்தரத் தீர்வாகும். அதன்மூலம் அனைத்துப் பிரதேசங்களுக்கும் தங்கு தடையின்றி நீரினைக் பகிர்ந்தளிக்க முடியும்” எனத் தொழில்நுட்ப ரீதியாக விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் , முடக்கப்பட்டிருந்த ‘ஹெட ஓயா’ நீர்ப்பாசனத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் ஆரம்பக்கட்ட நிர்வாக ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இத்திட்டம் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்படும் பட்சத்தில் பொத்துவில், லஹுகல, சியம்பலாண்டுவ மற்றும் திருக்கோவில் ஆகிய நான்கு பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் எதிர்நோக்கும் நீண்டகாலக் குடிநீர் தட்டுப்பாடு நீங்குவதுடன், விவசாயத்துறையிலும் பெரும் மறுமலர்ச்சி ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.