Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு 33 மில்லியன் நிதி ஒதுக்கீடு

Posted on June 19, 2026 by Admin | 258 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் கட்டிடங்கள் மற்றும் ஏனைய வசதிகளை மேம்படுத்துவதற்காக முதற்கட்டமாக 33 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதம மந்திரி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் பிரதமரின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நிலவும் வளப் பற்றாக்குறைகள் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இந்த வருடம் ஆரம்பக் கல்விக்கு 80 பேர், ஆங்கிலத்திற்கு 40 பேர், விஞ்ஞானத்திற்கு 30 பேர் மற்றும் கணிதத்திற்கு 30 பேர் என மொத்தமாக 180 ஆசிரியர்கள் இங்கு பயிற்சிக்காக சேர்க்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அதிகரித்துவரும் ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு, வகுப்பறைக் கட்டிடங்கள், ஆராதனை மண்டபம், அதிபர் விடுதி, விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு மற்றும் நீர் விநியோகத் திட்டங்களைப் புனரமைக்க விசேட நிதியொதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதம மந்திரி ஹரிணி அமரசூரிய, அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை கல்வி அமைச்சு முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இதன் முதற்கட்டமாக வகுப்பறைக் கட்டிடங்களைத் திருத்துவதற்காக 18 மில்லியன் ரூபாயும், அதிபர் விடுதிக்காக 7 மில்லியன் ரூபாயும், கூட்ட மண்டபத்திற்காக 8 மில்லியன் ரூபாயும் என மொத்தமாக 33 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார். அத்துடன், கலாசாலையின் ஏனைய தேவைகளும் படிப்படியாகக் பரிசீலிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

இத்துரித நடவடிக்கைக்காக பிரதமருக்கு பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.