Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

அட்டாளைச்சேனை மின்சார சபை டிப்போவாக மாறுகிறது- சாத்தியவள அறிக்கை கோரினார் அமைச்சர்

Posted on June 24, 2026 by Admin | 213 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அட்டாளைச்சேனை இலங்கை மின்சார சபை உப-டிப்போவை முழுமையான டிப்போவாக தரம் உயர்த்துவது குறித்த சாத்தியவள அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு மின்சார சபையின் தலைவருக்கு வலுசக்தி அமைச்சர் அநுர கருனாதிலக்க உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் வலுசக்தி அமைச்சர் அநுர கருனாதிலக்க தலைமையில் நடைபெற்ற அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தின் போதே இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும், வலுசக்தி அமைச்சுசார் குழுவின் உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, இதற்கான முக்கிய கோரிக்கையை முன்வைத்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக தாம் பதவி வகித்த 1994ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலேயே இந்த உப-டிப்போ ஆரம்பிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் 55,018 மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம், தேசிய கல்விக் கல்லூரி, அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, ஒலுவில் துறைமுகம் மற்றும் கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி உள்ளிட்ட பல முக்கிய அரச நிறுவனங்களும் இப்பிரதேசத்திலேயே அமைந்துள்ளன.

அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, தீகவாபி, ஆலங்குளம், அஷ்ரப் நகர் மற்றும் சம்புநகர் ஆகிய பரந்த பிரதேசங்களை உள்ளடக்கியதாக இந்த மின்சார சபைப்பிரிவு காணப்படுகிறது. இப்பகுதி மக்களின் தேவைகளையும், மின் விநியோகக் கட்டமைப்பு மேம்பாட்டையும் கருத்திற்கொண்டு, இந்த உப-டிப்போவை தரம் உயர்த்துவது காலத்தின் கட்டாயம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை வலியுறுத்தினார்.

முன்வைக்கப்பட்ட காரணங்களின் நியாயத்தன்மையை ஏற்றுக்கொண்ட வலுசக்தி அமைச்சர் அநுர கருனாதிலக்க, அட்டாளைச்சேனை மின்சார சபை உப-டிப்போவை டிப்போவாக தரம் உயர்த்துவது தொடர்பான விரிவான அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபையின் தலைவர் திரு. ஜயந்திக்கு அங்கேயே வைத்து பணிப்புரை விடுத்தார்.