Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

அனர்த்த காலங்களில் உடனே செயல்பட உள்ளூராட்சி சபைகளுக்கு வாகனங்களை வழங்கவும்- ஜனாதிபதியிடம் உதுமாலெப்பை எம்பி கோரிக்கை

Posted on July 1, 2026 by Admin | 164 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

பிரதேச செயலக மட்டத்தில் இயங்கும் அனர்த்த முகாமைத்துவக் குழுக்களின் செயற்பாடுகளைப் பலப்படுத்துவதற்காக உள்ளூராட்சி சபைகளுக்குத் தேவையான இயந்திர வாகனங்களை வழங்குவதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று(30) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய பேரழிவு செயலாற்று பேரவையின் 17 ஆவது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தேசிய மட்டத்தில் அனர்த்தக் குழுக்கள் இயங்குவதைப் போல்பிரதேச மட்டத்திலுள்ள அனர்த்தக் குழுக்களும் அனர்த்தம் ஏற்பட்டவுடன் உடனடியாகக் களமிறங்கிச் செயற்பட வேண்டியது அவசியமாகும். இதற்கு உள்ளூராட்சி சபைகளின் பங்களிப்பு முக்கியமானது என்பதால் அவற்றுக்கான வாகன வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டார ஆகியோர் முன்னிலையிலிருந்ததால் இதற்கான உரிய நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த காலங்களில் சூறாவளி மற்றும் பெரும் வெள்ளம் ஏற்பட்ட போது, கிழக்கு மாகாணத்தின் மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகள் ஒன்றிணைந்து தங்களின் இயந்திரங்களை கண்டி வரை கொண்டு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கிய வரலாற்றை அவர் இதன்போது நினைவூட்டினார்.

எனினும் தற்போது அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்தகண்டி, மஹஓயா, லஹுகல, தமன, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, இறக்காமம், கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில், நிந்தவூர், நாவிதன்வெளி, காரைதீவு, ஆலையடிவேம்பு ஆகிய உள்ளூராட்சி சபைகள் முறையான இயந்திர வாகனங்கள் இல்லாத நிலையிலேயே இயங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே இந்த உள்ளூராட்சி சபைகளுக்கு இயந்திர வாகனங்களை வழங்குவதன் மூலமே பிரதேச செயலக மட்ட அனர்த்தக் குழுக்களை மேலும் சக்திமிக்கதாக மாற்ற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

இக்கோரிக்கை குறித்து பதிலளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, உள்ளூராட்சி சபைகளுக்கான வாகனங்களை வழங்குவது மற்றும் அனர்த்தக் குழுக்களில் உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானங்களை மேற்கொள்வதே பொருத்தமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின் இணைத் தலைவர்களாக மாகாண ஆளுநர்கள் செயற்படுவதுடன் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களும் அதில் கலந்துகொள்வதால் இது குறித்து அங்கு விரிவாகக் கலந்துரையாடி ஒரு தீர்க்கமான முடிவுக்கு வருவது சிறந்தது என ஜனாதிபதி தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை மேலும் குறிப்பிட்டார்.