(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
இறக்காமத்தில் சுற்றுலா நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக மீண்டும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் அண்மையில் (02.07.2026) நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கருத்துத் தெரிவித்தபோது, சென்ற மாதம் நடைபெற்ற நீதி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள இறக்காமப் பிரதேசத்தில் சுமார் 18000 மக்கள் வாழ்கின்றனர். இதில் 94% மான சுமார் 17000 க்கும் மேற்பட்ட மக்கள் தமிழை தாய்மொழியாக கொண்டுள்ளனர். 12 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதான இறக்காமப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசமானது 2012 ஆம் ஆண்டு வரை அக்கரைப்பற்று நீதி நிர்வாக வலயத்தின் கீழ் காணப்பட்டதோடு பின்னர் அது அம்பாறை நீதி நிர்வாக வலயத்தின் கீழ் எவ்வித அறிவித்தலும் இன்றி மாற்றப்பட்டு இருந்தது சிங்கள மொழியை நீதிமன்ற மொழியாக கொண்ட அம்பாறை நீதி நிர்வாக வலயத்தின் கீழ் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட இறக்காமப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரதேசம் இணைக்கப்பட்டமையானது அப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களது அடிப்படை உரிமையை மீறுகின்ற ஒரு செயலாகும்.
அத்தோடு இப் பிரதேசத்தில் வாழ்கின்ற 94% மான தமிழ் பேசும் மக்கள் அம்பாறை நீதிமன்றங்களில் தமது வழக்கு நடவடிக்கைகளை தமக்கு பரீட்சயமற்ற சிங்கள மொழியில் தாக்கல் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் அத்தோடு வழக்கு நடவடிக்கைகளை கையாள்வதிலும் சிரமப்படுகின்றனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக தமிழில் இருந்து சிங்களத்துக்கும் சிங்களத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பு செய்வதற்காக வழக்குச் செலவுக்கு மேலதிகமாக பெருந்தொகையான பணத்தை செலவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது அத்தோடு வழக்கு நடவடிக்கைகளின் போதும் சாட்சியங்களின் போதும் நீதிமன்றின் பெறுமதியான நேரத்தை மொழிபெயர்ப்புக்காக செலவிட வேண்டிய துரதிஷ்டவசமான நிலையும் ஏற்பட்டுள்ளது.
இறக்காமப் பிரதேசமானது புவியியல் ரீதியாக சிங்கள மொழியை நீதிமன்ற மொழியாக கொண்ட அம்பாறை நீதி நிர்வாக வலயத்திற்கும் தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாக கொண்ட அக்கரைப்பற்று நீதி நிர்வாக வலயத்திற்கும் இடையில் அமையப் பெற்ற பிரதேசமாகும்.
தமிழ் மொழியிலான அக்கரைப்பற்று நீதி நிர்வாக வலயத்தினுள் அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் ஆகிய பொலிஸ் பிரிவுகள் மாத்திரம் உள்ளடங்குகின்றன. எனவே தான் தமிழ் பேசுகின்ற மக்களை கொண்ட இறக்காமப் பிரதேசமானது தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாக கொண்ட அக்கரைப்பற்று நீதி நிர்வாக வலயத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் அல்லது இறக்காமப் பிரதேசத்திற்கான தனியான நீதிமன்றம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை நீதி அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைவிடுத்திருந்ததுடன் இதன் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகள், பொலிஸ் விசாரணைகள் மற்றும் வழக்கு நடவடிக்கைகளை தமிழ்மொழியில் நடத்துவதற்கு இலகுவாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீதிச்சேவை ஆணைக்குழுவின் சார்பில் அமைச்சின் சென்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட உயர் அதிகாரி, இறக்காமம் பிரதேசத்தில் சுற்றுலா நீதிமன்றம் இயங்கி வருவதாக தெரிவித்தார்.
அதிகாரி கருத்து தெரிவித்த அதே கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை இறக்காமம் பிரதேச செயலாளர் மற்றும் இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளரை தொடர்புகொண்டு இறக்காமம் பிரதேசத்தில் சுற்றுலா நீதிமன்றம் இயங்குகிறதா என்று கேட்டபோது, இதுவரை அப்பிரதேசத்தில் சுற்றுலா நீதிமன்றம் இயங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், இறக்காமம் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபைத் தவிசாளர், சுற்றுலா நீதிமன்றம் இதுவரை இயங்கவில்லை என எழுத்துமூலம் நீதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த கடிதங்களின் பிரதிகளை பாராளுமன்ற உறுப்பினர் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, இறக்காமம் பிரதேசத்தில் சுற்றுலா நீதிமன்றம் அமைப்பது தொடர்பான கடிதங்களின் பிரதிகளை தமக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டதுடன், நீதிச்சேவை ஆணைக்குழுவுடன் தொடர்புகொண்டு இறக்காமம் பிரதேசத்தில் சுற்றுலா நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.