(அட்டாளைச்சேனை செய்தியாளர்-மஹாத்)
அம்பாரை மாவட்டத்தின் சிறந்த சமுர்த்தி முகாமையாளருக்கான கௌரவ விருது அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர் யூ.கே.எம். நளீமுக்கு நேற்று வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மேற்கு சமுர்த்தி வங்கியில் இவர் கடமையாற்றிய காலப்பகுதியில் அம்பாரை மாவட்ட மட்டத்தில் 41ஆவது தரவரிசையில் காணப்பட்ட குறித்த வங்கியை தனது வினைத்திறனான நிர்வாகத்தின் மூலம் 10ஆவது இடத்திற்கு முன்னேற்றிய அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டியே இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக முத்துகல அவர்களினால் இந்த விருது வழங்கி வைக்கப்பட்டது.
சிறப்பு நிகழ்வாக இடம்பெற்ற இவ்விருது வழங்கும் விழாவில், அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்கிரமாராச்சி, அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளருமான வி. ஜெகராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

