(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
நாட்டில் அச்சுறுத்தலாக மாறிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமானதும் பாதுகாப்பானதுமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில், ‘டெங்கற்ற கிழக்கு’ எனும் தொனிப்பொருளிலான மாபெரும் சிரமதான வேலைத்திட்டம் நாளை (02) அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்ட முதுமானி அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் விசேட ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலின் கீழ் அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பினால் இந்த விழிப்புணர்வு மற்றும் சிரமதான முன்னெடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நுளம்பு பெருகும் இடங்களை முற்றாக அழித்தொழிப்பதும் காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டே இந்தச் செயற்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் நேரடிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள இச்சிரமதான நிகழ்வானது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இரண்டு பிரதான வலயங்களாகப் பிரிக்கப்பட்டு வினைத்திறனான முறையில் செயற்படுத்தப்படவுள்ளது
வலயம் 01: காலை 07:00 மணிக்கு தைக்காநகர் ஷஹ்ரா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகும்.
வலயம் 02: காலை 07:30 மணிக்கு அட்டாளைச்சேனை கோணாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பமாகும்.
தற்போதைய காலநிலையைக் கருத்திற்கொண்டு நுளம்புகள் பெருகும் சூழலை அழித்து அட்டாளைச்சேனை பிரதேசத்தையும் எதிர்கால சந்ததியினரையும் பாதுகாப்பது ஒவ்வொருவரதும் தலையாய கடமையாகும்.
எனவே, கட்சி, அரசியல் பேதங்களைக் கடந்து அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள், வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்கி இந்த மாபெரும் சிரமதானப் பணியில் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.