நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் பல வருடங்களாகத் தேங்கிக் கிடக்கும் சுமார் 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிக்கும் நோக்கில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட விசேட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி உத்தியோகபூர்வமாகக் கிடைத்துள்ளது.
குறித்த சட்டமூலம் தொடர்பான சட்டப்பூர்வமான விளக்கமளிப்பு மற்றும் அனுமதியை சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது நீதி அமைச்சுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, இந்தச் சட்டமூலத்தை முழுமையாகத் தயாரித்து வெகுவிரைவில் அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை நீதி அமைச்சு துரிதப்படுத்தியுள்ளது.
முன்னதாக, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலதிகமாக 02 வருடங்களால் நீடிப்பதற்கான முன்மொழிவொன்று நீதி அமைச்சினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. நீதித்துறையின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியிருந்தது.
தற்போது நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 11 இலட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைகள் நிறைவடையாமல் தேங்கிக் கிடக்கின்றன. நீதிபதிகளின் சேவைக் காலத்தை நீடிப்பதன் ஊடாக, இந்த வழக்குகளைப் பின்தள்ளாமல் விரைவாக விசாரித்து மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இத்தீர்மானத்தின் பிரதான நோக்கமாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.