Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

கரடிக்குளம் றஹ்மானியா தவிக்க, அட்டாளைச்சேனையில் ஆசிரியர்கள் மேலதிகம் எனும் பொத்துவில் செய்திகளின் யதார்த்தம் என்ன?

Posted on August 25, 2026 by Admin | 171 Views

(ஆலங்குளம் செய்தியாளர் – பி.எம்.ஆரிப்)

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அட்டாளைச்சேனை கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட அதிகஷ்ட பிரதேச பாடசாலையான அக்/கரடிக்குளம் றஹ்மானியா வித்தியாலயத்தில் நிலவும் பாரிய ஆசிரியர் பற்றாக்குறையினால் மாணவர்களின் அடிப்படை கல்வி உரிமை மறுக்கப்பட்டு வருவதாகப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.

பாடசாலையின் தற்போதைய அவலநிலையைச் சுட்டிக்காட்டி பழைய மாணவர் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையில்,

குறித்த பாடசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் ஆளணி 22 ஆகும். ஆனால் தற்போது வெறும் 12 ஆசிரியர்கள் மட்டுமே கடமையில் உள்ளனர். 10 பாட ஆசிரியர்களுக்கான பாரிய பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில், கடந்த மூன்று வருடங்களாக 5 பழைய மாணவர்களே எவ்வித ஊதியமுமின்றி தொண்டர் அடிப்படையில் மாணவர்களுக்குக் கற்பித்து வரும் அவலநிலை காணப்படுகிறது.

இந்நிலையில் அட்டாளைச்சேனைக் கோட்டத்தில் மேலதிக ஆசிரியர்கள் கடமையாற்றுவதாகத் பொத்துவில் பிரதேசத்திலிருந்து தகவல்கள் வெளிவரும் நிலையில் கரடிக்குளம் றஹ்மானியா வித்தியாலயத்தில் கடந்த 5 வருடங்களாக ஏன் இந்தப் பற்றாக்குறை நீடிக்கிறது எனப் பழைய மாணவர்கள் அதிகாரிகளை நோக்கிக் கேள்வி எழுப்புகின்றனர். மற்றும் அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் காணப்படும் பல பாடசாலைகளில் இவ்வாறு ஆசிரியர் பற்றாக் குறை நிலவுகின்ற சந்தர்ப்பத்தில் அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் மட்டும் ஆசிரியர் மேலதிகம் என பொத்துவில் பிரதேசத்திலிருந்து வெளியிடப்படும் தகவல்களின் மாயையை உடைத்து உண்மைத்தன்மையை புரிந்து கொள்ளும் நிலை அவசியமாகிறது.

அக்கரைப்பற்று கல்வி வலயமானது பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய மூன்று முக்கிய கல்விக் கோட்டங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான வலயமாகும். இந்த மூன்று கோட்டங்களும் ஒரு தாயின் மூன்று பிள்ளைகளைப் போன்று சமமாகப் பாவிக்கப்பட வேண்டும். எங்கு ஆசிரியர்கள் மேலதிகமாக முடங்கிக் கிடக்கிறார்களோ, அவர்களை உடனடியாக விடுவித்து, கற்பிக்க நாதியற்றுத் தவிக்கும் வறிய பாடசாலைகளுக்கு இடமாற்ற வேண்டும்.

வெளியூர்களிலிருந்து பொத்துவில் பிரதேசப் பாடசாலைகளுக்குத் தினமும் நீண்ட தூரம் பயணம் செய்து கற்பிக்கும் ஆசிரியர்களின் தியாகம் வார்த்தைகளில் அடங்காதது. உதாரணமாக மருதமுனையிலிருந்து பொத்துவிலுக்கு சுமார் 140 கிலோமீற்றர்களுக்கும் மேல் ஒரு நாளைக்கு பயணித்து தமது வியர்வையையும் நேரத்தையும் அர்ப்பணித்து கல்விப் பணியாற்றும் வெளியூர் ஆசிரியர்களை இங்கு நன்றியோடு நினைவுகூர வேண்டும்.

நாட்டின் எந்தவொரு பாகத்திலும் கடமையாற்றுவதற்கு நான் தயார் என்ற நியதியின் அடிப்படையில் தொழிலை பெற்றுக் கொள்ளும் வெளியூர் ஆசிரியர்கள் ஏன் பொத்துவிலுக்கு ஒவ்வொரு நாளும் பிரயாணம் செய்து கற்பிக்க முடியாது என்ற கேள்வி எழுவது நியாயம்தான் அது போன்று பொத்துவில் பிரதேச ஆசிரியர்களும் நாட்டின் எப்பாகத்திலும் கடமையாற்றுவதற்கு நான் தயார் எனும் நியதிக்கு விதிவிலக்கானவர்களா? இந்தக் கேள்வியை தன்னை நோக்கி கேட்கும் போது கொஞ்சம் கசப்பாக மாறலாம்.

இவ்வாறான பல அசெளகரியங்களை சந்தித்து கற்பித்து வரும் வெளியூர் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புகளைப் பார்க்கும் போது ஒரு நியாயமான கேள்வி எழுகிறது. அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை கோட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் எவ்வாறு பல சிரமங்களுக்கு மத்தியில் பொத்துவிலுக்குச் சென்று கடமையாற்றுகிறார்களோ, அதேபோன்று பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர்களும் ஏனைய இரு கோட்டங்களுக்கும், வெளியூர்களுக்கும் சென்று தமது தியாகம் நிறைந்த கல்வியைப் போதிப்பது தர்மம் அல்லவா?

பொத்துவில் பிரதேச ஆசிரியர்களில் சிலர் தமது முதல் நியமனத்தைப் பெற்றதிலிருந்து பொத்துவில் பிரதேசப் பாடசாலையிலேயே வேரூன்றி நின்று 8 வருடங்களுக்கு மேலாக , சிலர் தமது ஓய்வுக்காலம் வரை ஒரே இடத்தில் கடமையாற்றும் தேக்கநிலை மாற்றப்பட வேண்டும். ஒரு ஆசிரியர் தனது முழுச் சேவைக் காலத்தையும் ஒரே பாடசாலையில் கழிப்பது ஆரோக்கியமான கல்வி முறைமைக்கு உகந்ததல்ல. சுழற்சி முறையிலான இடமாற்றமே வளப்பகிர்வின் ஏற்றத்தாழ்வுகளைப் போக்கும் ஒரே ஆயுதம்.

பொத்துவில் பிரதேச ஆசிரியப் பற்றாக்குறை, தனியான கல்வி வலயம் என்பன பொத்துவில் மக்களின் தீர்க்கப்பட வேண்டியதும் அவசியமானதுமான கோரிக்கையாகும், கடந்த காலங்களில் தலைசிறந்த கல்வியியலாளர்களை உருவாக்கிய பெருமைமிக்க வரலாறு பொத்துவில் மண்ணுக்கு உண்டு. ஆனால் தற்போது பொத்துவில் சமூகம் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணமும் இதுவாகும்.

வரலாறு நெடுகிலும் வெளியூர் ஆசிரியர்களிலேயே முழுமையாகத் தங்கியிருக்கும் நிலை ஆரோக்கியமானதல்ல. பொத்துவில் கல்விச் சமூகம் விழித்தெழ வேண்டும். தமது சொந்த மண்ணின் இளைஞர்களை முறையாகத் திட்டமிட்டு அவர்களைச் சிறந்த ஆசிரியர்களாக உருவாக்கி பொத்துவில் பிரதேசத்தின் கல்வியை மீண்டும் தன்னாட்சியுடன் மலரச் செய்வது காலத்தின் கட்டாயமாகும்.

அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் மட்டும் ஆசிரியர் மேலதிகம் என பொத்துவில் பிரதேசத்திலிருந்து வெளியிடப்படும் தகவல்கள் உண்மை என்றால் பொத்துவில் பிரதேச ஆசிரியர்களில் பலர் வெளியூர்களுக்கு இடமாற்றம் பெற்று கல்வியை போதிக்காமல் அப்பிரதேச பாடசாலையிலேயே ஓய்வு நிலை செல்கிறார்கள் என்ற உண்மைத்தன்மையையும் வெளிப்படுத்துவது யதார்த்தமாகும். உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பது தர்மம்தான் அதற்காக அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை கோட்டத்தின் எந்தவொரு பாடசாலைகளிலும் ஆசிரியப் பற்றாக்குறையில்லை என்பது அப்பட்டமான பொய்யாகும்.

பொத்துவில் கோட்டத்தினை அக்கரைப்பற்று வலயக் கல்வி அதிகாரிகள் கண் திறந்து பார்க்கவில்லை என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது. காலத்திற்கு காலம் தம்மிடம் உள்ள ஆசிரியர் வளத்தினை வைத்து பொத்துவில் கோட்ட பாடசாலைகளுக்கு அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களிலிருந்து ஆசிரியர்களை இடமாற்றம் செய்துள்ளனர். அதில் ஏதாவது குறைபாடுகள் காணப்பட்டால் அதனை முறையாக அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

இவ்வாறு தொடர்ந்து அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் அதிகாரிகளை விமர்சிப்பது பொத்துவில் கோட்டத்திற்கான நிரந்தர ஆசிரிய வளத்தினை பெற்றுத்தராது. கல்வி அமைச்சருடன் எமது பொத்துவில் பிரதேச ஆசிரியப் பற்றாக்குறையை முன்வைத்து புதிய ஆசிரிய நியமனங்களில் பொத்துவில் பிரதேசத்தை முதன்மைப்படுத்தி எமது பொத்துவில் பிரதேச கல்வித் தாகத்தை தீர்க்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல் தற்போது நாட்டில் அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயங்க தலைமையிலான சிறந்த ஆட்சியில் பொத்துவில் பிரதேசத்தின் ஆசிரியப்பற்றாக் குறையை நிச்சயமாப தீர்த்துக்கொள்ள முடியும்.

அட்டாளைச்சேனை கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட அதிகஷ்ட பிரதேச பாடசாலையான அக்/கரடிக்குளம் றஹ்மானியா வித்தியாலயத்தின் தற்போதைய நிலையே மோசமாக உள்ள நிலையில், 2027 ஆம் ஆண்டில் கடமையிலுள்ள ஆசிரியர்களில் ஒருவர் ஓய்வுபெறவுள்ளார். மேலும் இருவர் வருடாந்த இடமாற்றத்தின் கீழ் செல்லவுள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில், தரம் 1 தொடக்கம் தரம் 11 வரையான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை எஞ்சியுள்ள 9 ஆசிரியர்களைக் கொண்டு எவ்வாறு சமாளிப்பது என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

ஆசிரியர்கள் இன்மையால் பாடங்களை முழுமையாக நடத்தி முடிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் வீழ்ச்சியடைவதோடு, அவர்களின் எதிர்கால வாய்ப்புகளும் பறிக்கப்படுகின்றன. “கல்விச் சமத்துவம் – எங்கள் உரிமை” என்பதை வலியுறுத்தி மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு உடனடியாகத் தலையிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பற்றாக்குறையாக உள்ள 10 ஆசிரியர் ஆளணியையும் வேறு பாடசாலைகளில் இருந்தாவது உடனடியாக இடமாற்றம் செய்து தருமாறும், அல்லது வெற்றிடங்களை நிரப்ப துரித நடவடிக்கை எடுக்குமாறும் அக்/கரடிக்குளம் றஹ்மானியா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் கல்வி அதிகாரிகளிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் ஆசிரியர் மேலதிகம் என பொத்துவில் பிரதேசத்திலிருந்து தகவல்கள் வெளிவரும் நிலையில் அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகின்ற பாடசாலைகளும் உள்ளன எனும் யதார்த்தத்தையும் புரிந்துகொள்ளா வேண்டும்.