Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

அட்டாளைச்சேனையில் ரண்விமன திட்டத்தில் 3 வீடுகள் கையளிப்பு

Posted on August 26, 2026 by Admin | 75 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர் – மஹாத்)

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ‘ரண்விமன’ சமுர்த்தி வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 03 புதிய வீடுகளைப் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வும், 03 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நேற்று (25) விமர்சையாக இடம்பெற்றன.

மக்களின் அடிப்படைப் பிரச்சினையான வீட்டுத் தேவையினைப் பூர்த்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் தலா இரண்டு வீடுகள் வீதம் மொத்தம் ஆறு வீடுகளுக்கான செயற்றிட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். அத்துடன், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சீ. அப்கர், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி நஹீஜா முஸப்பீர், பிரதேச செயலகக் கணக்காளர் எம்.எப். பர்ஹான், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.எம். ஹமீட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் செயலாளர்களான ஆசிரியர் ஆரிப் மற்றும் ஜெஸீல், பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் இணைப்பாளர் சுல்த்தான் சத்தார், கிராம உத்தியோகத்தர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், அட்டாளைச்சேனை பிராந்திய ‘பிரஜா சக்தி’ அமைப்பின் தவிசாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த வீடமைப்புத் திட்டமானது வெறுமனே வீடுகளை வழங்கும் செயற்றிட்டமாக மாத்திரமன்றி, வறிய குடும்பங்களின் பாதுகாப்பான வாழ்வுக்கும், அவர்களின் எதிர்கால நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்குமான சிறந்ததொரு மக்கள் நலப் பணியாக அமைந்துள்ளதாக நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.