Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை நிராகரிக்கும் பொலிஸாருக்கு எதிராக கடும் நடவடிக்கை

Posted on September 3, 2026 by Admin | 110 Views

வாகனச் சாரதிகள் காண்பிக்கும் டிஜிட்டல் காப்புறுதி (Digital Insurance) அட்டைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பீ.ஜே. சேனாதீர எச்சரித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை நிராகரித்து சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது கடுமையான கடமை மீறலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுக்கை மற்றும் கம்பஹா பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த சில அதிகாரிகள் இவ்வாறு டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து, பொதுமக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

R.T.M. 93 சுற்றுநிருபத்தின் கீழ், 2026.05.05 ஆம் திகதியிடப்பட்ட மேலதிக அறிவித்தலினூடாக, காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட 14 முன்னணி காப்புறுதி நிறுவனங்களால் வழங்கப்படும் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் நாட்டின் அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன், 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் இந்த டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளுக்கு முழுமையான சட்ட அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

சாரதியிடம் காப்புறுதி அட்டை இல்லாத பட்சத்தில், குறித்த வாகனத்தின் காப்புறுதி செல்லுபடியான நிலையில்தான் உள்ளதா என்பதைப் பின்வரும் இலவச முறைகளூடாக பொலிஸ் அதிகாரிகள் இலகுவாகச் சரிபார்த்துக்கொள்ள முடியும்:

 USSD முறை: #1338 என டயல் செய்து, காப்புறுதி இலக்கம் அல்லது வாகன இலக்கத்தை உள்ளீடு செய்தல்.

 குறுஞ்செய்தி (SMS): 1338 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்புதல்.

 அழைப்பு மையம் (Hotline): 1338 என்ற உடனடி அழைப்பு மையத்தை தொடர்புகொள்ளுதல்.

இந்த நடைமுறைகள் தொடர்பில் நாடு முழுவதிலும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஊடாக, கீழ்நிலை அதிகாரிகளுக்கு மீண்டும் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் காப்புறுதி அட்டையை எந்தவொரு பொலிஸ் அதிகாரியாவது ஏற்றுக்கொள்ள மறுக்கும் பட்சத்தில், அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் (OIC) அல்லது போக்குவரத்துப் பொலிஸ் தலைமையகத்தின் 070 475 5600 என்ற விசேட வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கத்திற்கு உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த விதிமுறைகளை மீறிச் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராக எவ்வித தயக்கமுமின்றி கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.