Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஆலங்குளம் றஹுமானியா வித்தியாலயம் 100 வீத சித்தி!

Posted on September 3, 2026 by Admin | 189 Views

(ஆலங்குளம் செய்தியாளர்-பி.எம்.ஆரிப்)

அட்டாளைச்சேனை ஆலங்குளம் றஹுமானியா வித்தியாலயம் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் நூற்றுக்கு நூறு வீத சித்தியைப் பெற்றுத் தனது பாடசாலை வரலாற்றில் புதிய மைல்கல்லை நாட்டியுள்ளது.

இம்முறை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் இப்பாடசாலையிலிருந்து 14 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்கள் அனைவரும் 80 புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பாடசாலை வரலாற்றில் 100 வீத சித்தி பதிவு செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும். இது பாடசாலை சமூகத்திற்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

விசேட அம்சமாக, இப்பாடசாலையைச் சேர்ந்த மாணவன் ஒருவர் 139 புள்ளிகளைப் பெற்று மாவட்ட வெட்டுப்புள்ளியைத் தாண்டி சாதனை படைத்துள்ளார். இது பாடசாலையின் கல்வித் தரச் சுட்டெண்ணின் துரித வளர்ச்சியையும், கற்பித்தல் செயற்பாடுகளின் வினைத்திறனையும் கோடிட்டுக் காட்டுகிறது.

பௌதீக மற்றும் ஆளணி வளப்பற்றாக்குறைகளுடன், ஏனைய அடிப்படை வசதிகளும் குன்றிய நிலையில் இயங்கி வரும் ஓர் ‘அதிகஷ்டப் பாடசாலை’யான ஆலங்குளம் றஹுமானியா வித்தியாலயம், இத்தகையதொரு மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளமையானது கல்விச் சமூகத்தினர் மத்தியிலும் பொதுமக்களிடையேயும் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

“வசதிகள் குறைந்தாலும் முயற்சிகள் குறையவில்லை; வளங்கள் குறைந்தாலும் சாதனைகள் குறையவில்லை” என்பதற்கு ஆலங்குளம் றஹுமானியா வித்தியாலயத்தின் இவ்வெற்றி சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும்.

இந்த வரலாற்றுச் சாதனைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பாடசாலை அதிபர் கே.எல்.எம்.முனாஸ், பிரதி அதிபர், தரம் 5 மாணவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்குப் பக்கபலமாக நின்ற பெற்றோர்கள் என அனைவருக்கும் தினகரன் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.