Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

25 வருட சரித்திரத்தை மாற்றியமைத்த அக்கரைப்பற்று அல்-கமர் வித்தியாலய மாணவி

Posted on September 5, 2026 by Admin | 432 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

நகர்ப்புறப் பாடசாலைகளும், சகல வசதிகளையும் கொண்ட மாணவர்கள் மாத்திரமே தேசிய மட்டப் பரீட்சைகளில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற மாயையைத் தகர்த்தெறிந்து அண்மையில் வெளியான 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட இசங்கணிச்சீமை அல்-கமர் வித்தியாலயம் மாபெரும் வரலாற்றுச் சாதனையொன்றைப் பதிவு செய்துள்ளது.

அடிப்படை வசதிகள் கூடப் பற்றாக்குறையாகக் காணப்படும் இந்த அதிகஷ்டப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியான எம்.ஆர். ரீஹா ஐஷத் இம்முறை பரீட்சையில் 145 புள்ளிகளைப் பெற்று மாவட்ட வெட்டுப்புள்ளியைத் தாண்டிச் சித்தியடைந்துள்ளார்.

கடந்த 25 வருட காலமாக இப்பாடசாலையைச் சேர்ந்த எந்தவொரு மாணவரும் மாவட்ட வெட்டுப்புள்ளியை எட்டாத நிலையில் வறுமையையும் வசதியீனங்களையும் தாண்டி கால் நூற்றாண்டு கால அந்த ‘எட்டாக்கனியை’ வசப்படுத்தி மாணவி ரீஹா ஐஷத் பாடசாலைக்குப் பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.

இந்த வரலாற்று வெற்றிக்கு மத்தியில் இவ்வருடம் இப்பாடசாலையிலிருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 11 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று, 100 சதவீத சித்தியைப் பதிவு செய்துள்ளமை இப்பாடசாலையின் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லாக அமைந்துள்ளது.

ஆயிரக்கணக்கில் பணஞ்செலவழித்து மேலதிக வகுப்புகளுக்கு (Tuition) செல்லும் கலாசாரம் மேலோங்கியுள்ள இக்காலத்தில் இந்த மாணவர்கள் எவரும் அவ்வாறான எந்தவொரு மேலதிக வகுப்பிற்கும் சென்றவர்களல்லர். அன்றாடம் வறுமையின் பிடிகளுக்குள் அகப்பட்ட, நாளாந்தக் கூலித் தொழிலை நம்பியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் பாடசாலையில் வழங்கப்படும் கல்வியை மாத்திரமே முழுமையாக நம்பியிருந்தவர்கள்.

இப்பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேலதிக வகுப்பறைக் கட்டட வசதிகள் கூட கிடையாது. போதிய இடவசதியற்ற மிகக் கடினமான சூழலிலுமே இம்மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்ந்தனர்.

போதிய கட்டட வசதிகள் இல்லை, மேலதிக வகுப்புகளுக்குச் செல்ல வசதியற்ற வறிய மாணவர்கள் என்ற இந்தச் சவால்களை எல்லாம் முறியடித்து இந்த மகத்தான வெற்றியைச் சாத்தியமாக்கியதன் முழுப் பெருமையும் பாடசாலையின் அதிபர் ஐ.எல். அமீன் மற்றும் கற்பித்த ஆசிரியை எம்.ஐ. நுஸ்ரா ஆகியோரின் அளப்பரிய தியாகத்தையும், அயராத உழைப்பையுமே சாரும்.

இந்த மகத்தான வெற்றியின் ஆணிவேராகத் திகழ்வது பாடசாலையின் அதிபர் ஐ.எல். அமீன் அவர்களின் அளப்பரிய தியாகமும், அயராத உழைப்புமேயாகும். நீண்ட தூரம் பயணித்து பல போக்குவரத்துச் சிரமங்களுக்கு மத்தியில் நாளாந்தம் இந்த அதிகஷ்டப் பாடசாலைக்குச் செல்லும் அதிபர் இம்மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் செயற்பட்டுள்ளார். ஏழ்மையிலிருக்கும் மாணவர்களைத் தமது சொந்தப் பிள்ளைகளாக எண்ணி, அவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவையும், சிறந்த தலைமைத்துவமுமே இன்று இந்த வரலாற்றுச் சாதனைக்கு வித்திட்டுள்ளது. ஒரு பாடசாலை அதிபர் நினைத்தால் எத்தகைய கடினமான சூழ்நிலையையும் மாற்றி அமைக்க முடியும் என்பதற்கு அதிபர் அமீன் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்.

வறுமையில் வாடும் மாணவர்களைத் தட்டிக் கொடுத்து அவர்களின் உளவியலைப் புரிந்து கொண்டு, சலிப்பின்றி கற்பித்த ஆசிரியை எம்.ஐ. நுஸ்ரா அவர்களின் அர்ப்பணிப்பும், ஏனைய ஆசிரியர்களின் கூட்டு முயற்சியும் இங்கு சிறப்பித்துக் கூறத்தக்கது.

எந்தவொரு வசதியுமற்ற, அதிகஷ்டப் பாடசாலையான இசங்கணிச்சீமை அல்-கமர் வித்தியாலயம் படைத்துள்ள இந்த மாபெரும் சாதனையானது சகல வசதிகளையும் கொண்ட ஏனைய பாடசாலைகளுக்கு ஒரு பெரும் உந்துசக்தியாகும்.

இத்தகைய திறமையான மாணவர்களை உருவாக்கும் இப்பாடசாலைக்குத் தேவையான மேலதிக வகுப்பறைக் கட்டடங்கள், தளபாடங்கள் மற்றும் பௌதீக வளங்களை உடனடியாகப் பெற்றுக் கொடுக்க உரிய தரப்பினர் முன்வர வேண்டும்.