ஒலுவில் பிரதேசத்தில் மழைக் காலங்களில் மக்கள் எதிர்கொள்ளும் நீண்டகால வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் 5 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் வடிகான் சீரமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் ஒலுவில் அல்-ஹம்றா தேசிய பாடசாலை மைதானத்தின் மேற்குப் பகுதியிலும், வெளிச்சவீட்டு வீதியிலும் அமைந்துள்ள வடிகான்கள் அகலப்படுத்தப்பட்டு மீள்நிர்மாணம் செய்யப்படவுள்ளன. அத்துடன், வெள்ள நீரைத் தடையின்றி வெளியேற்றும் நோக்கில், தென்கிழக்குப் பல்கலைக்கழக வீதி ஊடாக களியோடை வடிச்சல் ஆற்றுடன் இணையும் வகையில் புதிய வடிகான் அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்புப் பேரவை உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா கலந்துகொண்டு திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் சுல்தான் சத்தார், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளர், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர், தேசிய மக்கள் சக்தி செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


