Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 14, 2026

கிழக்கு மாகாண கிரிக்கெட் சம்பியனானது அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக்கழகம்: தேசிய மட்டத்திற்குத் தகுதி!

Posted on October 5, 2026 by Admin | 101 Views

50ஆவது தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண மட்டத்திலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்ட அணிகளை வீழ்த்தி அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அட்டாளைச்சேனை சோபர் (Sober) விளையாட்டுக்கழகம் கிழக்கு மாகாண சம்பியனாக முடிசூடி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இந்த மகத்தான வெற்றியின் மூலம் தேசிய மட்ட கிரிக்கெட் போட்டிக்கும் இக்கழகம் தகுதிபெற்று அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்கும் ஒட்டுமொத்த அம்பாறை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

சோபர் விளையாட்டுக்கழகத்தின் இந்த வெற்றிப் பயணமானது மிகவும் சவால்கள் நிறைந்ததாகும். முதலில் அட்டாளைச்சேனை பிரதேச மட்டத்தில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் களமிறங்கிய இவ்வணி அங்கு பங்கேற்ற சகல அணிகளையும் தோற்கடித்து ‘பிரதேச சம்பியனாக’ மகுடம் சூடியது. அதனைத் தொடர்ந்து அம்பாறை மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற பலப்பரீட்சையிலும் தமது ஆதிக்கத்தைச் செலுத்தி ‘மாவட்ட சம்பியனாகவும்’ தெரிவானது.

இதன் உச்சக்கட்டமாகவே தற்போது நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண மட்டப் போட்டியில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பலம்வாய்ந்த சம்பியன் அணிகளை எதிர்கொண்டு தமது அபாரத் திறமையின் மூலம் வீழ்த்தி கிழக்கு மாகாணத்தின் கிரிக்கெட் முடிசூடா மன்னர்களாகத் தம்மை நிலைநிறுத்தியுள்ளனர்.

அண்மைக்காலமாக சோபர் விளையாட்டுக்கழகம் படைத்து வரும் இந்தச் சாதனைகளுக்குப் பின்னால் கழக வீரர்களின் அளப்பரிய தியாகங்களும், அயராத உழைப்பும் அடங்கியுள்ளன. குறிப்பாக பிரதேசத்தின் திறமைவாய்ந்த இளைஞர்கள் தமது அன்றாட தனிப்பட்ட சிரமங்களையும் பொருட்படுத்தாது விளையாட்டின் மீதான அதீத தாகத்தோடு மேற்கொண்ட கடினமான பயிற்சிகளே இந்த வெற்றிக்கான அடித்தளமாகும். களத்தில் வெறும் தனிநபர்களாக அன்றி ஒரு குடும்பமாக அவர்கள் வெளிப்படுத்திய விட்டுக்கொடுப்பும், விட்டுக்கொடுக்காத வீரமும், சிறப்பான கூட்டுமுயற்சியுமே (Teamwork) சாத்தியமற்றதையும் சாத்தியமாக்கியுள்ளது.

இளைஞர்களின் இந்த வெற்றிப் பயணத்திற்குப் பக்கபலமாக கழகத்தின் சிறந்த வழிகாட்டல்களை வழங்கும் ஆலோசகர்கள் மற்றும் நவீன நுணுக்கங்களைக் கற்றுக்கொடுக்கும் அனுபவமிக்க பயிற்சியாளர்கள் ஆகியோர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். முகாமைத்துவத்தின் முறையான திட்டமிடலும், வீரர்களின் திறமைகளை இனங்கண்டு அவர்களைச் செதுக்கிய விதமுமே இன்று சோபர் விளையாட்டுக்கழகத்தை கிழக்கு மாகாணத்தின் அசைக்க முடியாத ஒரு விளையாட்டுச் சக்தியாக உருமாற்றியுள்ளது.

கடந்த காலங்களிலும் பல தொடர்ச்சியான வெற்றிகளைத் தமதாக்கி அட்டாளைச்சேனையின் விளையாட்டு வரலாற்றில் தமக்கென ஒரு தனியிடத்தைத் தக்கவைத்துள்ள சோபர் விளையாட்டுக்கழகம் எதிர்வரும் தேசிய மட்டப் போட்டிகளிலும் கிழக்கு மாகாணத்தின் பலத்தை நிரூபித்து தேசிய ரீதியில் முத்திரை பதிக்கும் என விளையாட்டு ஆர்வலர்களும், பிரதேச மக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் தேசிய மட்டத்திலும் சாதனை படைக்க எமது தெளிவு செய்தித் தளமும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.