Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

வைத்தியர் சுகுணனின் வழக்கு நவம்பர் 02ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Posted on October 12, 2026 by Admin | 65 Views

கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஆடை விவகாரம் தொடர்பில் சர்ச்சை நிலவிய காலப்பகுதியில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட கருத்துகளுக்கு எதிராக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தாக்கல் செய்த வழக்கு இன்று (12) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் எக்ஸ்.எச். விஜயகுமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், ஊடகவியலாளர் யூ.எல். மப்ரூக், மிப்ளால் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online Safety Act) கீழ் இந்த வழக்கை விசாரிப்பதற்கான நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் இதன்போது அடிப்படை ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டன.

மறுபுறம் முறைப்பாட்டாளரான வைத்தியர் கு. சுகுணன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்ஷான் டயஸ் தலைமையில் சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனா ஆஜராகி தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம், முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளைத் தொடர்ந்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 02ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தது.

இதேவேளை இன்றைய வழக்கு விசாரணையில் ஆஜராகாத பிரதிவாதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், அஹமட் லெப்பை முகமது முக்தார் மற்றும் முகமது இப்ராஹிம் ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 02ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.