(எம்.ஜே.எம்.சஜீத்)
அம்பாறை மாவட்டத்தில் கடந்த யுத்த காலத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் (OMP) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று (14) முன்னெடுக்கப்பட்டன.
இந்த விசாரணை நடவடிக்கைகளில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர். இதன்போது யுத்த சூழ்நிலையில் காணாமல் போன தமது உறவினர்கள் தொடர்பான முக்கிய தகவல்கள், விபரங்கள் மற்றும் சான்றாதாரங்களை அவர்கள் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு உண்மையில் என்ன நேர்ந்தது என்ற உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் மற்றும் தமக்கு உரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இந்த விசாரணைகளில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.