Top News
| இரண்டு வருடங்கள் கடந்தும் நிர்மாணிக்கப்படாத அட்டப்பள்ளம் பாலம்! நாளை பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்.பி. கேள்வி | | தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி அப்துல் முனாஸின் புதல்வர் அய்யாஸ் பொறியியல் பட்டம் பெற்றார் | | அட்டாளைச்சேனை அல்-ஜென்னாஹ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.ஐ.எம்.றியாஸ் கடமையேற்பு |
Oct 24, 2026

ஒலுவில் லெவன் ஸ்டார் வசமானது ‘எவர்டொப் நைட் கப் – 2026’ வெற்றிக்கிண்ணம்

Posted on October 19, 2026 by Admin | 69 Views

எவர்டொப் விளையாட்டுக் கழகத்தின் (Evertop Sports Club) 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ‘எவர்டொப் நைட் கப் – 2026’ (Evertop Night Cup 2026) மாபெரும் இரவுநேர மின்னொளி கிரிக்கெட் தொடரில் ஒலுவில் லெவன் ஸ்டார் (Eleven Star) விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய இரவுநேர கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக விறுவிறுப்புடன் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் ஒலுவில் லெவன் ஸ்டார் அணியும் அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் (Marksman) விளையாட்டுக் கழகமும் மோதின. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒலுவில் லெவன் ஸ்டார் அணி வெற்றிக் கிண்ணத்தைத் தமதாக்கியது.

5 ஓவர்கள் கொண்ட விலகல் (Knockout) முறையில் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியில் 48 கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுத் தமது திறமைகளை வெளிப்படுத்தின. ஆரம்பச் சுற்றுப் போட்டிகளின் முடிவில் அக்கரைப்பற்று சினாத் டிராவல்ஸ் (Sinath Travels SC), ஒலுவில் லெவன் ஸ்டார் (Eleven Star SC), அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் (Marksman SC) மற்றும் அக்கரைப்பற்று டிரிபிள் பி (Trible B SC) ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தன.

1996ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட எவர்டொப் விளையாட்டுக் கழகமானது கடந்த மூன்று தசாப்தங்களாக கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சி, இளைஞர்களின் முன்னேற்றம் மற்றும் விளையாட்டின் ஊடாக சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் செயற்பட்டு வருகின்றது. அக்கழகத்தின் 30 ஆண்டுகாலப் பயணத்தைச் சிறப்பிக்கும் வகையிலும் புதிய வீரர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து கழகங்களுக்கிடையிலான நட்புறவை வளர்க்கும் நோக்கிலும் இத்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இத்தொடரின் இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் வெற்றியீட்டிய அணிகளுக்கான வெற்றிக்கிண்ணங்களையும் வழங்கி வைத்தார்.

இச்சுற்றுப்போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனுசரணையாளர்கள், நடுவர்கள், வர்ணனையாளர்கள், ஊடகக் குழுவினர், அணிகளின் நிர்வாகிகள், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எவர்டொப் விளையாட்டுக் கழக நிர்வாகத்தினர் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.