Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

இலங்கையில் பின்வரும் 8 பிரதான சேவைகளுக்கு ‘டின்’ சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

Posted on October 30, 2026 by Admin | 103 Views

எதிர்வரும் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி (2026.11.01) முதல் நாட்டில் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட சில பிரதான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு செல்லுபடியாகும் வரி செலுத்துநர் அடையாள இலக்கச் (TIN) சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால் கடந்த 2026 செப்டம்பர் 22 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள ‘SEC/2026/E/07’ எனும் இலக்கத்தையுடைய விசேட சுற்றறிக்கையிலேயே இந்த விடயம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 103 ஆவது பிரிவின் (6) ஆவது உப பிரிவு மற்றும் 102(3) ஆவது பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைவாக இந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதற்கமைய அனைத்து அரச நிறுவனங்கள், ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.  

TIN சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள 08 முக்கிய பணிகள்:

1. ஏதேனும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் புதிய கணக்கொன்றைத் திறப்பதற்கு.

2. உள்ளூராட்சி மன்றங்களில் கட்டடப் பட (Building Plan) அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு.

3. புதிய வாகனமொன்றைப் பதிவு செய்வதற்கு.

4. வாகனத்தின் வருடாந்த அனுமதிப்பத்திரத்தை (Revenue License) புதுப்பிப்பதற்கு.

5. காணி உரிமத்தை மாற்றுவதற்கு.

6. வியாபாரமொன்றைப் பதிவு செய்வதற்கு.

7. கம்பனி பங்குகளை மாற்றுவதற்கு.

8. கடன் அட்டைகளைப் (Credit Card) பெற்றுக்கொள்வதற்கு.

சுற்றறிக்கை நடைமுறைப்படுத்தப்படும் நிறுவனங்கள்:

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள இச்சுற்றறிக்கையானது பின்வரும் 09 பிரதான நிறுவனங்கள் மற்றும் அதிகாரசபைகளுக்குப் பொருந்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது:  

1.அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்.  
2.அனைத்து உள்ளூராட்சி மன்றங்கள்
3.மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்.
4.மாகாண இறைவரி ஆணையாளர்கள்.
5.பிரதேச செயலாளர்கள்.
6.பதிவாளர் நாயகம் திணைக்களம்.  
7.கம்பனிகள் பதிவாளர் நாயகம் திணைக்களம். 
8.கடன் அட்டை வழங்கும் நிறுவனங்கள்.  
9.ஏனைய சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள்.  

குறித்த நிறுவனங்களில் நவம்பர் 01 ஆம் திகதி முதல் மேற்கூறப்பட்ட சேவைகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் பொதுமக்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழங்கப்படும் செல்லுபடியாகும் TIN சான்றிதழைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.