பாடசாலையின் பௌதீக வளங்களை மேம்படுத்தும் நோக்கில், அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி அர் ரஹீமிய்யா பாடசாலையின் அதிபர் ஏ.எம். மிஸ்வர் தனது சொந்த நிதியிலிருந்து பாடசாலை அலுவலகத்திற்குத் தேவையான அதிநவீன தளபாடங்கள் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்து அன்பளிப்புச் செய்துள்ளார்.
பாடசாலையின் நிர்வாகச் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும், அதிபர் அலுவலகத்திற்கு வருகை தரும் கல்வி அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் அதிதிகளுக்குச் சிறந்ததொரு சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் அதிபர் தனது சொந்தப் பணச் செலவில் நவீன கதிரைகள், சோபா தொகுதி உள்ளிட்ட பல பெறுமதியான அலுவலக உபகரணங்களை இவ்வாறு வழங்கி வைத்துள்ளார்.
அரசாங்க நிதி ஒதுக்கீடுகளை மாத்திரம் எதிர்பார்த்துக் காத்திராது தனது தனிப்பட்ட நலன்களைத் தாண்டி பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளைத் தரமுயர்த்துவதிலும், பாடசாலையின் நற்பெயரைப் பேணிப் பாதுகாப்பதிலும் அதிபர் ஏ.எம்.மிஸ்வர் காட்டிவரும் அர்ப்பணிப்பு கல்விச் சமூகத்தினால் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகின்றது.
எவ்வித பிரதிபலனும் எதிர்பாராது கல்வி மீது கொண்ட நேசிப்பின் காரணமாக முன்னெடுக்கப்பட்டுள்ள இத்தகைய முன்மாதிரியான நற்பணிகள், பாடசாலையின் நிர்வாகத் தரத்தை உயர்த்துவதுடன் மாணவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் உந்துசக்தியாக அமையும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதிபரின் இந்தத் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர் (SDEC), பழைய மாணவர் சங்கத்தினர் (PPA), ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.