திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பல்துறை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது இன்று (02) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த வீதியூடாகப் பயணித்த முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து இனந்தெரியாத நபர்களால் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது படுகாயமடைந்த மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றைய இருவரும் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசேட பொலிஸ் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.