Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

TIN சான்றிதழ் இல்லாமலேயே வங்கிக் கணக்கு திறக்கலாம்: அரசாங்கம் அறிவித்துள்ள புதிய நடைமுறை

Posted on November 4, 2026 by Admin | 65 Views

வரி செலுத்துநர் அடையாள இலக்கத்தை (TIN – Taxpayer Identification Number) பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிரமங்கள் மற்றும் அலுவலக நெரிசல்களைக் குறைக்கும் நோக்கில் TIN இலக்கம் இல்லாதவர்களும் தடையின்றி வங்கிக் கணக்குகளைத் திறக்கவும், வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் (Revenue License) புதுப்பிக்கவும் அரசாங்கம் விசேட அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்தத் தகவலை வெளியிட்டார்.

புதிய நடைமுறையின் கீழ் பொதுமக்கள் வங்கிகளில் நடைமுறை அல்லது சேமிப்புக் கணக்குகளைத் திறக்கும்போதும், மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகங்களில் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்கும்போதும் TIN சான்றிதழைக் கட்டாயம் சமர்ப்பிக்கத் தேவையில்லை. அதற்குப் பதிலாகப் பின்வரும் அடிப்படைத் தகவல்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் குறித்த சேவைகளைத் தடையின்றிப் பெற்றுக்கொள்ள முடியும்

1. தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC) 2.செயற்பாட்டில் உள்ள தொலைபேசி இலக்கம் 3.மின்னஞ்சல் முகவரி (Email Address)

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் 18 வயது பூர்த்தியான அனைவரும் TIN இலக்கத்தைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து வங்கிக் கணக்குகளைத் திறத்தல், வாகனப் பதிவு மற்றும் வருமான வரி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல், காணிப் பதிவு போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் ஒரே நேரத்தில் இலட்சக்கணக்கான மக்கள் விண்ணப்பித்தமையால் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளக் கட்டமைப்பிலும் (RAMIS), அலுவலகங்களிலும் கடும் நெரிசல் ஏற்பட்டதுடன் பொதுமக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரும் தாமதங்களை எதிர்கொண்டனர்.

இதனைக் கருத்திற்கொண்டே பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில் இந்தத் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழங்கும் தேசிய அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கத் தரவுகளைக் கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் ஒருங்கிணைந்து விண்ணப்பதாரர்களுக்கான TIN இலக்கத்தை உள்ளக ரீதியாகப் பதிவு செய்துகொள்ளும் பொறிமுறை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் சுட்டிக்காட்டினார்.