நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன், புத்தாக்கச் சிந்தனை மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ASHRAQIAN EXPO – 2026” மாபெரும் கல்வி மற்றும் அறிவியல் கண்காட்சி பாடசாலை அதிபர் ஏ. அப்துல் கபூர் தலைமையில் நேற்று (04) கோலாகலமாக ஆரம்பமானது.
பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கண்காட்சியை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இதன்போது மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அறிவியல் கண்டுபிடிப்புகள், நவீன தொழில்நுட்பப் படைப்புகள் மற்றும் புத்தாக்க முயற்சிகளை தவிசாளர் நேரில் பார்வையிட்டதுடன் மாணவர்களின் அபார திறமைகளைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார்.
மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை இனங்கண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அவர்களின் ஆர்வத்தை மேம்படுத்த இத்தகைய கண்காட்சிகள் சிறந்த அடித்தளமாக அமைகின்றன எனப் பிரதம அதிதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
நேற்று ஆரம்பமான இக்கண்காட்சி எதிர்வரும் 07ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளதுடன் மாணவர்களின் படைப்பாற்றலையும் அறிவியல் சிந்தனையையும் சமூகத்திடம் கொண்டு சேர்க்கும் இம்முயற்சிக்குக் கல்விமான்கள் மற்றும் பிரதேச மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.