அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான இவ்வருடத்திற்கான (2026) இஸ்லாமிய கலாசாரப் போட்டிகளில் மாகாண மட்டத்தில் சாதனை படைத்து தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள அட்டாளைச்சேனை பிரதேச மாணவனைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத் ஜும்மா பள்ளிவாயல் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் ஜும்மாத் தொழுகையைத் தொடர்ந்து பள்ளிவாயலின் தலைவர் எம்.எச். ஷர்மி (MLT) தலைமையில் பள்ளிவாயல் வளாகத்தில் நேற்றுமுன்தினம் (06) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
மாகாண மட்டத்திலான அரபு எழுத்தணி (Arabic Calligraphy) போட்டியில் முதலிடத்தைப் பெற்று அட்டாளைச்சேனை மண்ணுக்குப் பெருமை சேர்த்ததுடன் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள எம்.ஐ. இன்சாத் அஹமத் எனும் மாணவனே இதன்போது விசேடமாகப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். அம்மாணவனின் ஆளுமை மற்றும் கலைத்திறனை ஊக்குவித்து வளர்த்தமைக்காக அவரது தந்தையாரும் பள்ளிவாயல் நிர்வாகத்தினரால் இதன்போது பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகப் பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் அக்ரம் அபூபக்கர் (நளீமி) கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் கௌரவ அதிதியாக அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.எல். பயிஸ் அவர்களும், விசேட அதிதிகளாக ரஹ்மானியாபாத் ஜும்மா பள்ளிவாயலின் முன்னாள் தலைவர்களான அதிபர் எம்.எச். அப்துர் ரஹ்மான் மற்றும் ஓய்வுபெற்ற அதிபர் எம்.ஏ. அன்சார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதம அதிதி, மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுடன் இணைந்ததாக இஸ்லாமிய கலாசார மற்றும் இணைப்பாடவிதானத் திறன்களை வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர். பிரதேச ரீதியாக இத்தகைய திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களை இனங்கண்டு பள்ளிவாயல் மட்டத்தில் கௌரவிப்பது ஏனைய மாணவர்களுக்கும் சிறந்த முன்மாதிரியாகவும் உந்துசக்தியாகவும் அமையும் எனப் பாராட்டுத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள், உலமாக்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் ஜமாஅத்தார்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மாணவனின் தேசிய மட்ட வெற்றிக்காகத் தமது வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்தனர்.

