Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

மருதமுனை ‘தலைவர் அஷ்ரப் கிண்ண’ கிரிக்கெட் தொடரில் 22 அணிகளை வீழ்த்தி ‘அக்பர்’ அணி சம்பியன்

Posted on November 10, 2026 by Admin | 94 Views

மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவாக மருதமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ‘தலைவர் அஷ்ரப் கிண்ணம் – 2026’ (Leader Ashraff Trophy – 2026) மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மருதமுனை ‘அக்பர்’ விளையாட்டுக் கழகம் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது.

மருதமுனை மஸ்ஹூர் மௌலானா பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிறு (நவம்பர் 07, 08) ஆகிய இரு தினங்கள் மிகவும் விறுவிறுப்பாக இச்சுற்றுப்போட்டி நடைபெற்றது. பிரதேசத்திலுள்ள இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணரும் வகையிலும் கழகங்களுக்கிடையிலான நல்லுறவு மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கிலும் இத்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச்சுற்றுப்போட்டியில் பிரதேசத்தின் முன்னணி விளையாட்டுக் கழகங்கள் உட்பட மொத்தம் 22 அணிகள் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தின. ஆரம்ப சுற்றுப் போட்டிகளிலிருந்து விறுவிறுப்பாக இடம்பெற்ற மோதல்களின் முடிவில் ‘அக்பர்’ விளையாட்டுக் கழகமும் ‘கல்பனா’ விளையாட்டுக் கழகமும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.

பெரும் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் நடைபெற்ற தீர்க்கமான இறுதிப் போட்டியில் சகல துறைகளிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்பர் அணி, கல்பனா அணியை வெற்றிகொண்டு 2026 ஆம் ஆண்டுக்கான ‘தலைவர் அஷ்ரப் கிண்ண’ சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டது. இரண்டாம் இடத்தை கல்பனா அணி பெற்றுக்கொண்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனை மத்திய குழுவின் வழிகாட்டலில் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியின் பிரதான அனுசரணையை கட்சியின் மருதமுனை அமைப்பாளரும் ‘சாரோ’ (SARO) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான எம்.எச்.எம். தாஜுதீன் வழங்கியிருந்தார்.

இறுதிப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களையும் பணப்பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கௌரவ மற்றும் விசேட அதிதிகளாக பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், கட்சியின் அம்பாறை மாவட்டச் செயலாளரும் உயர்பீட உறுப்பினருமான ஏ.சி. சமால்தீன் ஆகியோருடன் கட்சி முக்கியஸ்தர்கள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான கிரிக்கெட் ரசிகர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

போட்டியின் நிறைவில் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் ஆட்டநாயகன் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இச்சுற்றுப்போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துக் கழகங்கள், நடுவர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் ஊர்மக்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினர் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.