Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

iPhone-களைக் குறிவைத்த பாரிய சைபர் ஊடுருவல்

Posted on November 18, 2026 by Admin | 88 Views

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற BBC, HSBC UAE வங்கி, Air France மற்றும் IKEA உள்ளிட்ட சுமார் 200 முன்னணி இணையத்தளங்கள் மீது பாரிய சைபர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் நிதித் தகவல்களைத் திருடும் நோக்கிலும் Apple சாதனங்களை முடக்கும் வகையிலும் இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதான நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் ஒன்லைன் (Online) பயன்பாட்டு அனுபவங்களை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தும் ‘Optimizely’ டிஜிட்டல் தளத்தினூடாகவே ஹெக்கர்கள் இந்த ஊடுருவலை மேற்கொண்டுள்ளனர். குறித்த தளத்தில் சிதைக்கப்பட்ட ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript) குறியீட்டைச் சேர்ப்பதன் மூலம், சுமார் 178 இணையத்தளங்களை அவர்கள் நேரடியாக இலக்கு வைத்துள்ளதாக ‘Cyber News’ சுட்டிக்காட்டியுள்ளது.

வாடிக்கையாளர்களின் கடன் அட்டை (Credit Card) இலக்கங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி (Cryptocurrency) தரவுகளைத் திருடுவதே இத்தாக்குதலின் பிரதான நோக்கமாக இருந்துள்ளது. அத்துடன் Apple சாதனங்களின் பாதுகாப்பை பலவீனப்படுத்துவதற்கான குறியீடுகளையும் ஹெக்கர்கள் இதன்போது பதிவேற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சைபர் தாக்குதலை முதன்முதலில் கண்டறிந்த இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான ஸ்கொட் ஹெல்மே (Scott Helme) இது தொடர்பில் தனது வலைப்பதிவில் குறிப்பிடுகையில்;

“உலகின் அதிகளவான பார்வையாளர்களைக் கொண்ட Zoom, BBC, CNN, Salesforce, GitLab, IKEA, HSBC (UAE), Equifax, Air France-KLM, Ledger மற்றும் Peacock ஆகிய முன்னணித் தளங்களும் இத்தாக்குதலுக்கு இலக்காகிய பட்டியலில் உள்ளடங்குகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

“இந்தத் தாக்குதலை மேற்கொண்டவர்களின் கிரிப்டோ பணப்பைகளுக்கு (Wallets) நவம்பர் 16ஆம் திகதி சுமார் ஒன்பது மணி நேர இடைவெளிக்குள் 7,040 அமெரிக்க டொலர்கள் வைப்பிலிடப்பட்டுள்ளன” எனவும் அவர் மேலும் அம்பலப்படுத்தியுள்ளார். எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட இணையத்தளங்களிலிருந்து தற்போது பெரும்பாலான தீங்கிழைக்கும் குறியீடுகள் நீக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை குறித்த ஊடுருவல் தொடர்பில் ‘Optimizely’ நிறுவனம் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. “எமது ‘Optimizely Web Experimentation’ வாடிக்கையாளர்களைப் பாதித்த குறித்த பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கண்டறிந்து, அதனை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், “பாதிக்கப்பட்ட வலையமைப்புப் பாதை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், ஊடுருவப்பட்ட குறியீடுகளும் முற்றாக அகற்றப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளோம்” எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.