தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி எதிர்வரும் 16ஆம் திகதியளவில் சூறாவளியாக வலுப்பெறக்கூடும் என்பதால் ஆழ்கடல் மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய நாளை (14) அதிகாலை 5.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்துக்கு அப்பாலான கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முற்றாகத் தவிர்க்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
வங்கக் கடலின் வட அகலாங்கு 5 தொடக்கம் 15 பாகைக்கும், கிழக்கு நெட்டாங்கு 80 தொடக்கம் 90 பாகைக்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகள் மற்றும் கடற்படையினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த கடற்பரப்புகளில் தற்போது மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான கடற்பரப்புகளுக்கோ அல்லது கரைக்கோ திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது வடமேற்குத் திசையில் நகர்ந்து நாளை மறுதினம் (15) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்தும் வலுப்பெற்று, எதிர்வரும் 16ஆம் திகதியளவில் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் சூறாவளியாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் தொடர்ச்சியாக வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அவசர அறிவித்தல்கள் தொடர்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.