கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றி வரும் தொண்டர் ஆசிரியர்களுக்கு உதவி ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றதா எனப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கேள்வி எழுப்பவுள்ளார்.
நாளை (14) பாராளுமன்றத்தில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் கேட்பதற்காக அவர் சமர்ப்பித்துள்ள வினாவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ள அவரின் வினாவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தற்போது கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் விபரங்களையும், அவர்களின் சேவைக் காலம் தொடர்பான விபரங்களையும் அமைச்சர் சபையில் சமர்ப்பிப்பாரா?
அத்துடன் குறித்த தொண்டர் ஆசிரியர்களுக்கு உதவி ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொண்டு வருகின்றதா என்பதை அமைச்சர் இச்சபைக்கு அறிவிப்பாரா? அவ்வாறில்லையெனில் அதற்கான காரணம் என்ன? என உதுமாலெப்பை எம்.பி. தனது வினாவில் சுட்டிக்காட்டியுள்ளார்.