Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்!

Posted on August 30, 2026 by Admin | 78 Views

பால்மா, திரவப் பால் மற்றும் யோகட் உள்ளிட்ட அத்தியாவசிய பாலுற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென நுகர்வோர் விவகார அதிகாரசபை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

‘பிரேக்கிங் நியூஸ்’ (Breaking News) என்ற தலைப்பில், மேற்படி பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்த்தப்பட்டுள்ளதாக போலியான செய்தியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதை அவதானித்துள்ள நிலையிலேயே அதிகாரசபை இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விலை அதிகரிப்புத் தகவல்கள் முற்றிலும் அடிப்படையற்றவை எனத் தெரிவித்துள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபை, இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத போலிச் செய்திகளைப் பொதுமக்கள் மற்றவர்களுக்குப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

இத்தகைய உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பகிர்வதன் மூலம் நுகர்வோர் மத்தியில் தேவையற்ற பீதி ஏற்படுவதுடன், சந்தையில் செயற்கையான தட்டுப்பாடும் தவறான புரிதல்களும் தோற்றுவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, சந்தையில் பொருட்களின் விலைகள் தொடர்பில் சந்தேகங்கள் இருந்தாலோ அல்லது வியாபாரிகளால் ஏதேனும் முறைகேடுகள் முன்னெடுக்கப்பட்டாலோ, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு உடனடியாக அறிவிக்க முடியும் எனவும் பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.