Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

Posted on September 4, 2026 by Admin | 127 Views

சர்ச்சைக்குரிய ‘எயார்பஸ்’ விமானக் கொள்வனவு விவகாரம் தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக அவர் இன்று முற்பகல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அங்கு பல மணிநேரம் அவரிடம் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னரே, ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக 06 எயார்பஸ் A-330 விமானங்கள் மற்றும் 08 A-350 ரக விமானங்களைக் கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கலின் போது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக அன்றைய ஸ்ரீலங்கன் விமானச் சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த மோசடி தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய, கபில சந்திரசேன கடந்த மார்ச் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். எனினும், பிணையில் வெளிவந்திருந்த நிலையில், கடந்த மே 08 ஆம் திகதி அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுவொரு தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இதேவேளை, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள இந்த எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கில், இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகநபரான ஷமீந்திர ராஜபக்ஷ ஆகியோரைக் கைது செய்ய தற்போது திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், பிரான்ஸின் எயார்பஸ் தாய் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டிற்கு வருகை தந்து ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே, பல வருடங்களாக இழுபறியிலிருந்த குறித்த விசாரணைகளின் முக்கிய கட்டமாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு கைதாகியுள்ளார்