Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

கிழக்கு மாகாணத்தை வியக்க வைத்த மருதமுனை மாணவி லிபா பாத்திமாவுக்கு நாளை பாராட்டு ஊர்வலம்

Posted on September 9, 2026 by Admin | 219 Views

அண்மையில் வெளியான 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மாணவி முகம்மட் முஜாஹித் லிபா பாத்திமா 181 புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாண மட்டத்தில் முதலிடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

சிறுவயது முதலே கல்வியில் அதீத ஈடுபாடும், கூர்மையான அறிவாற்றலும் கொண்ட லிபா பாத்திமா, தனது விடாமுயற்சியினால் இந்த இலக்கை அடைந்துள்ளார். இவரது இந்த அபார சாதனை கல்முனை கல்வி வலயத்திற்கு மாத்திரமன்றி தான் கல்வி கற்ற அல் மனார் மத்திய கல்லூரிக்கும், தனது சொந்த ஊரான மருதமுனைக்கும் அழியாத பெருமையைத் தேடித்தந்துள்ளது.

மாகாணத்தையே வியந்து பார்க்கச் செய்துள்ள இம்மாணவியின் கல்வித் தாகமும், அசாத்திய சக்தியும் அனைவராலும் போற்றப்பட வேண்டியதாகும்.

கிழக்கு மாகாணத்திற்குப் பெருமை சேர்த்துள்ள இச்சாதனை நாயகி, ஹஸைன் சாஹிப் முகம்மட் முஹாஜித் மற்றும் அப்துல் ஹமீது ஸஃனாஸ் தம்பதியினரின் அருமைப் புதல்வியாவார்.

தனது அசாத்திய திறமையினால் அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்துள்ள மாணவி லிபா பாத்திமாவைக் கௌரவிக்கும் மாபெரும் பாராட்டு ஊர்வலம் நாளை (10) வியாழக்கிழமை காலை 08:30 மணிக்கு பாடசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மிகச் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

மாணவி லிபா பாத்திமாவின் இந்த வெற்றிப் பயணத்திற்கு அத்திவாரமாக அமைந்த அவரது பெற்றோர், சிறந்த வழிகாட்டலை வழங்கிய பாடசாலை அதிபர், அர்ப்பணிப்புடன் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையிலும் அவருக்கு உறுதுணையாக நின்ற நல்உள்ளங்கள் அனைவரும் இத்தருணத்தில் பாராட்டுக்குரியவர்கள்.