நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்த ஹோமாகம பிரதேசத்தில் உள்ள பிரபல உணவகம் ஒன்றுக்கு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஹோமாகம, கலவிலவத்தை பகுதியில் அமைந்துள்ள குறித்த தனியார் உணவகத்தில், கடந்த 2025 டிசம்பர் 11 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளால் திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, 500 மில்லி லீற்றர் கொள்ளளவுடைய குடிநீர் போத்தல் ஒன்று 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.
அச்சமயத்தில் நடைமுறையில் இருந்த 2430/15 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலின் (கட்டளை எண் 93) பிரகாரம், 500 மி.லீ. உள்நாட்டு குடிநீர் போத்தலுக்கான அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபாவாகக் காணப்பட்டது. இவ்வாறு கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில், குறித்த நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான உணவக நிர்வாகம் தமது குற்றத்தை மன்றில் ஒப்புக்கொண்டது. இதனையடுத்து, குறித்த நிறுவனத்திற்கு நீதிமன்றம் ரூ. 500,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இதேவேளை, கடந்த 2026 ஜூன் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2492/29 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலின் (கட்டளை எண் 96) படி, தற்போது உள்நாட்டில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன:
500 மி.லீ. – 999 மி.லீ. வரை: ரூ. 80.00
1 லீற்றர் – 1.499 லீற்றர் வரை: ரூ. 120.00
1.5 லீற்றர் – 1.999 லீற்றர் வரை: ரூ. 150.00
2 லீற்றர் – 2.499 லீற்றர் வரை: ரூ. 180.00
5 லீற்றர் – 6.999 லீற்றர் வரை: ரூ. 400.00
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதலான விலைக்கு குடிநீர் போத்தல்கள் அல்லது ஏனைய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால், அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.