Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

இறக்காமம் நாவலடி வட்டை காணிப் பிரச்சினைக்கு அமைச்சரிடம் நேரடியாக விடை கோரும் உதுமாலெப்பை எம்பி

Posted on September 22, 2026 by Admin | 80 Views

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில் கடந்த 30 வருடங்களாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள 21 விவசாயிகளின் காணிப் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை நாளை (23) பாராளுமன்றத்தில் விசேட கேள்வியொன்றை எழுப்பவுள்ளார்.

நாளையதினம் சபையில் இடம்பெறவுள்ள வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் கவனத்திற்கு இந்த முக்கிய விடயத்தை அவர் கொண்டுவரவுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவலடி வட்டை பிரதேசத்தில் 1986, 1989, 1991 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் காணிக் கச்சேரிகள் நடத்தப்பட்டன. இதன்போது, காணி ஆணையாளர் நாயகத்தின் அங்கீகாரத்திற்கு அமைய, அம்பாறை மாவட்டச் செயலகத்தினூடாக 21 விவசாயிகளுக்குக் காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இவ்வாறு சட்டபூர்வமாக அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும், அம்பாறை மாவட்டச் செயலாளரின் பணிப்புரை எனத் தெரிவித்து, குறித்த காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாமென இறக்காமம் பிரதேச செயலாளரால் தொடர்ச்சியாக இடையூறுகள் விளைவிக்கப்பட்டு வந்துள்ளன.

இதனால் சுமார் 30 வருடங்களாகக் கமத்தொழில் மற்றும் மேட்டுநிலச் செய்கைகளில் ஈடுபட முடியாமல் குறித்த 21 விவசாயிகளும் தமது வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமையை உதுமாலெப்பை எம்.பி சபையின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் காணிகளை மீள அடையாளம் கண்டு கையளிப்பதற்காக அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினால் விசேட குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தது. எனினும், பிரதேசச் செயலாளர் மற்றும் நில அளவையாளர் திணைக்கள உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய இக்குழுவினர் அப்பகுதிக்குச் சென்றபோது, காணிகள் கையளிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் வெளியாட்கள் சிலர் அவர்களுக்கு இடையூறு விளைவித்திருந்தனர்.

இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கமத்தொழில் மற்றும் காணி அமைச்சர் அறிவாரா எனச் சபையில் வினவவுள்ள உதுமாலெப்பை எம்.பி, எவ்வித தடையுமின்றி குறித்த காணிகளை மீளவும் உரிய விவசாயிகளிடம் கையளிப்பதற்கு அமைச்சு எடுக்கவுள்ள துரித நடவடிக்கைகள் யாவை என்பது குறித்தும் அமைச்சர் தரப்பிலிருந்து விளக்கம்கோரவுள்ளார்.