Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் பாலியல் தொல்லை – 55 வயது விரிவுரையாளர் கைது

Posted on October 2, 2026 by Admin | 142 Views

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி பயிற்சி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டின் பேரில் அக்கல்லூரியின் 55 வயதுடைய விரிவுரையாளர் அம்பாறை மாவட்ட பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான விரிவுரையாளர் பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காண்பித்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர் கல்லூரியின் பாடங்களுக்கான மதிப்பெண்களை (Marks) வழங்கும் முக்கிய பொறுப்பில் இருந்ததால் இது குறித்து வெளியில் முறைப்பாடளித்தால் தமது மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு கல்வி பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் நீண்டகாலமாக மௌனம் காத்து வந்தமை ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆரச்சிக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றினையடுத்து இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் அம்பாறை மாவட்ட மகளிர் பணியகத்தின் விசேட பொலிஸ் குழுவினர் நேற்று (01) குறித்த விரிவுரையாளரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (02) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அம்பாறை மாவட்டப் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைக்கமையவும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆரச்சியின் வழிகாட்டலிலும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்ட மகளிர் பணியகப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் தயானி கமகே, பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.டி.பி. தரங்கா ஆகியோர் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.