தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நாளை (13) புதியதொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை (Low Pressure Area) உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியிலும் நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளிலும் நாளை முதல் அடுத்த சில நாட்களுக்கு மழைவீழ்ச்சி சடுதியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையான மிகப்பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். அதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் கடற்பயணங்களில் ஈடுபடுவோர் மற்றும் மீனவ சமூகத்தினர், வளிமண்டலவியல் திணைக்களத்தால் தொடர்ச்சியாக வழங்கப்படும் வானிலை முன்னறிவிப்புகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து உயிரிழப்புகள் மற்றும் சேதங்களைத் தவிர்த்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பொதுமக்கள் தவறாது மேற்கொள்ள வேண்டும்.
இது தவிர சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் நேற்றைய வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.