Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 14, 2026

அட்டாளைச்சேனையில் ரூபா 20 மில்லியனில் உருவாகும் பிரமாண்ட உள்ளக விளையாட்டு அரங்கு

Posted on October 14, 2026 by Admin | 47 Views

அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சுமார் 20 மில்லியன் ரூபா செலவில் அதிநவீன உள்ளக விளையாட்டு அரங்கு (Indoor Sports Complex) ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் தெரிவித்தார்.

இந்த உள்ளக விளையாட்டு அரங்கானது குறிப்பாக கிரிக்கெட் மற்றும் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுப் பயிற்சிகளை எவ்வித காலநிலைத் தடங்கல்களுமின்றி முன்னெடுப்பதற்கும் உள்ளக விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கும் ஏற்ற வகையில் சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்படவுள்ளது.

பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸின் விசேட முன்னெடுப்பு மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளின் பலனாகவே இந்தப் பாரிய அபிவிருத்தித் திட்டம் தற்போது அட்டாளைச்சேனையில் சாத்தியமாகியுள்ளது. இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடான 20 மில்லியன் ரூபாவில் மத்திய அரசாங்கம் 15 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதுடன், எஞ்சிய 5 மில்லியன் ரூபாவை அட்டாளைச்சேனை பிரதேச சபை தனது சொந்த நிதியிலிருந்து ஒதுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்திட்டம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ்,

“எமது பிரதேசத்தைச் சேர்ந்த திறமையான இளைஞர்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் தமது விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான காத்திரமானதொரு களத்தை அமைத்துக் கொடுப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அம்பாறை மாவட்டத்தில் விளையாட்டுத்துறைக்கான உட்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள நிலையில் இந்த நவீன உள்ளக விளையாட்டு அரங்கின் ஊடாக எதிர்காலத்தில் பல சாதனை வீரர்களை எமது அட்டாளைச்சேனை மண்ணிலிருந்து உருவாக்க முடியும் என நாம் உறுதியாக நம்புகின்றோம்” என்றார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டமானது அப்பிரதேச விளையாட்டு கழகங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.