Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

அட்டாளைச்சேனை பாவங்கா வீதியில் காட்டு யானைகள் அட்டகாசம்

Posted on October 28, 2026 by Admin | 109 Views

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாவங்கா வீதிப் பகுதியில் நேற்று (27) இரவு ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டதில் பல சொத்துக்கள் சேதமடைந்துள்ளதுடன் அவ்வீதியைப் பயன்படுத்தும் பயணிகள் மற்றும் விவசாயிகளின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு வேளையில் திடீரென மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் அப்பகுதியிலுள்ள கடைகள் மற்றும் சுற்று மதில்களைத் தாக்கி இடித்துத் தள்ளியுள்ளதுடன் தோட்டங்களில் மக்கள் சிரமப்பட்டுப் பராமரித்து வந்த பெறுமதியான தென்னம்பிள்ளைகளையும் பிடுங்கி நாசமாக்கியுள்ளன. யானைகளின் இந்த திடீர் படையெடுப்பால் அப்பகுதி மக்கள் நேற்றிரவு முழுவதும் பெரும் அச்சத்திலும் பதற்றத்திலும் உறைந்திருந்தனர்.

குறித்த பாவங்கா வீதியானது சம்புநகர் மற்றும் ஆலங்குளம் ஆகிய பிரதேசங்களை இணைக்கும் முக்கிய பாதையாகக் காணப்படுகின்றது. இதனால், இரவு நேரங்களில் இவ்வீதியூடாகப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் உயிர்களுக்குக் காட்டு யானைகளின் நடமாட்டம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. எந்நேரத்தில் யானைகள் வீதிக்கு வருமோ என்ற உயிர் அச்சத்துடனேயே பயணிகள் இவ்வீதியைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது.

இதேவேளை அப்பகுதி விவசாயிகள் தமது வயல் வேலைகளுக்காக அன்றாடம் பயன்படுத்தும் பிரதான பாதையாகவும் இந்தப் பாவங்கா வீதி விளங்குகின்றது. அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் தமது விவசாய நடவடிக்கைகளுக்காகச் செல்லும் விவசாயிகளுக்கும் இந்த யானைகளின் நடமாட்டம் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்்அவர்களின் அன்றாட வாழ்வாதாரப் பணிகளையும் முடக்கியுள்ளது.

இரவு நேரங்களில் இடம்பெற்றுவரும் இவ்வாறான காட்டு யானைகளின் ஊடுருவலால் தமது உயிருக்கும் உடமைகளுக்கும் எவ்விதப் பாதுகாப்பும் இல்லாத நிலை உருவாகியுள்ளதாகப் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே இவ்வீதியில் பயணிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகளுக்குப் பாரிய உயிர்ச்சேதங்கள் சம்பவிப்பதற்கு முன்னர் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாகத் தலையிட்டு காட்டு யானைகளின் அச்சுறுத்தலிலிருந்து தம்மைப் பாதுகாக்க நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.