Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய வாசிப்பு மாத விசேட நிகழ்வு

Posted on November 3, 2026 by Admin | 94 Views

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களின் எழுத்தறிவு மற்றும் பொது அறிவுத் திறனை மேம்படுத்தும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் அதிபர் ஓ.எல்.எம். ரிஸ்வான் தலைமையில் இன்று(03) வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பிரபல கலைஞரும், எழுத்தாளரும், ஒலுவில் அல்-ஹம்றா வித்தியாலயத்தின் பிரதி அதிபரும், பிறை எப்.எம் வானொலியின் அறிவிப்பாளருமான ஜே.வஹாப்தீன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது சிறப்புரையில் நவீன தொழில்நுட்ப யுகத்தில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளில் மூழ்கிவிடாது, நூல்களைத் தமது உயிர் நண்பர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் வாசிப்பு மாத்திரமே ஒரு மனிதனைப் பூரணப்படுத்துவதுடன் சிறந்த ஆளுமையுள்ள நபராக மாற்றுகிறது எனவும் சுட்டிக்காட்டி மாணவர்களின் வாசிப்புத் திறனைத் தூண்டும் வகையிலான பல்வேறு ஊக்கமளிக்கும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் செயன்முறை ரீதியான போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அவர்களுக்குப் பல்வேறு தலைப்புகளிலான நூல்கள் வழங்கப்பட்டன. குறித்த நேரத்திற்குள் அந்நூல்களை வாசித்த மாணவர்களிடம் இருந்து நூலின் உள்ளடக்கம் சார்ந்த வினாக்கள் தொடுக்கப்பட்டன. இப்போட்டிகளைப் பிரதம விருந்தினரான ஜே.வஹாப்தீன் அவர்களே நேரடியாகவும் மிக நேர்த்தியாகவும் ஒருங்கிணைத்து நடத்தியதுடன் அதில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிபெற்ற மாணவர்களுக்குத் தனது கரங்களால் பரிசில்களையும் வழங்கி உற்சாகப்படுத்தினார்.

இப்போட்டிகளுக்கு அமைவாக வாசிப்பு மாதத்தினை முன்னிட்டுப் பாடசாலை மட்டத்தில் நூல் கண்காட்சி மற்றும் அறிமுகம், மாணவர்கள் தாம் வாசித்த நூல்களின் சுருக்கத்தைப் பகிர்ந்துகொள்ளும் நூல் நயப்பு, நாளாந்தப் பத்திரிகை வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் வகுப்பறை மட்டத்தில் ‘சிறு நூலகங்களை’ (Reading Corners) உருவாக்குதல் போன்ற பல்வேறு ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. இச்செயற்பாடுகள் மாணவர்களிடையே வாசிப்புக் குறித்த புதியதொரு விழிப்புணர்வையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

பாடசாலையின் தமிழ் மொழித்துறை சார்ந்த ஆசிரியர்களான என்.எம்.நஜாத் , ஏ.சிபா, எம்.ஐ.றிஷ்வின் உள்ளிட்ட தமிழ் துறை ஆசிரியர்களின் சிறப்பான ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு மிகவும் நேர்த்தியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் பாடசாலையின் பிரதி அதிபர்களான ஆர்.எம்.ஜப்ராஸ், ஏ. பனீஸ், எஸ்.எல்.தாஜுதீன் ஆகியோரும் உடற்கல்வி ஆசிரியரான ஜே.பஸ்மீர் மற்றும் ஏனைய ஆசிரியர்களும் இந்நிகழ்வினைத் திட்டமிட்டு நெறிப்படுத்தி மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடித்தமை குறிப்பிடத்தக்கது.