Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

சம்மாந்துறையில் பொலிஸார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: பெற்றோர் உட்பட மூவர் அதிரடி கைது

Posted on November 5, 2026 by Admin | 252 Views

சம்மாந்துறையில் தலைக்கவசமின்றி ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் குறித்த மூவருடன் மோட்டார் சைக்கிளை வழங்கிய பெற்றோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (03) சம்மாந்துறைப் பகுதியில் இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவத்தைத் தொடர்ந்தே மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் அவர்களுக்கு வாகனத்தை வழங்கிய பெற்றோரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் இணைந்து சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை பொதுமக்களுக்கு ஐந்து முக்கிய வழிகாட்டல்களை நேற்று (04) விடுத்துள்ளது. பெரிய பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் அல்ஹாஜ் எம்.எல்.அப்துல் மஜீத் (ஜே.பி) அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

1. சாரதி அனுமதிப்பத்திரம் இன்றியும், தலைக்கவசம் அணியாமலும் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

 2.ஒரே மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டோர் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

 3.சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குவதைப் பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்.

 4.போக்குவரத்து விதிகளையும், போக்குவரத்துப் பொலிஸாரின் அறிவுறுத்தல்களையும் முழுமையாக மதித்து வாகனங்களைச் செலுத்த வேண்டும்.

 5.கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், பொதுமக்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்தும் விதத்திலும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

தமது பிள்ளைகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குவதால் அவர்களுக்கும் ஏனையோருக்கும் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகக்கூடிய இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்த்து சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுமாறும் சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.